ஞாயிறு, 23 டிசம்பர், 2018

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை! December 22, 2018

Image

போதிய ஆதாரம் இல்லாததால் சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை செய்யப்படுவதாக மும்பையில் உள்ள சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
மோடியின் மனசாட்டியான அமித்ஷாவை ஒரு என்கவுண்டர் வழக்கு நிம்மதி இழக்கச் செய்தது. சொராபுதீன் ஷேக்... பாஜக தேசிய தலைவர் அமிதாவின் தலையின் மேல் தொங்கிக்கொண்டிருந்த கத்தி... ஆம், இன்றிலிருந்து சற்றேறக்குறைய, 12 ஆண்டுகளுக்கு முன்பு 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி 2 பேரை குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீஸ் கடத்தியதாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்டு 4 நாட்கள் கழித்து சுட்டுக்கொல்லப்படுகின்றனர் சொராபுதீன் மற்றும் அவரது மனைவி கவுசார் பி. 4 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சொராபுதீன் மனைவி கவுசார் பி கொல்லப்பட்டதாக சி.பி.ஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

சொராபுதீனுக்கு, லஷ்கர்-இ- தொய்பா அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும், குஜராத் மாநிலத்தின் அன்றைய முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொல்ல இவர் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் போலியானது எனவும், இதில், அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தொடர்பு இருந்ததாக சி.பி.ஐ. அதிரடியாக தெரிவிக்க, அமித்ஷா உட்பட 38 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனால், எந்த நேரத்திலும், அமித்ஷா கைது செய்யப்படலாம் என சொல்லப்பட்தால், குஜராத்தே உச்சகட்ட பதற்றத்துடன் காணப்பட்டது. அதற்கு ஏற்ப, அமித்ஷாவும் சில மாதங்கள் தலைமறைவாக இருந்தார். இதனால், குஜராத் மாநிலத்திற்குள்ளேயே நுழைய அமித்ஷாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நரேந்திர மோடியை தேசிய அரசியலுக்கு நகர்த்தும் திட்டம் மறைமுக செயல்வடிவம் பெற்றுக்கொண்டிருந்த போது, அமித்ஷாவே மோடியின் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்க இருந்தார்.
சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கால், அமித்ஷாவின் முதலமைச்சர் கனவு கானல் நீராக மாறியது. அடுத்தடுத்த சில மாத தலைமறைவுக்குப் பிறகு, 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார் அமித்ஷா. பின்னர், 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அமித்ஷாவுக்கு ஜாமீன் வழங்கி சற்று ஆறுதல் கொடுத்தது.

2014-ல் மத்தியில் ஆட்சி மாறியது. நரேந்திர மோதி நாட்டின் பிரதமாரானார். அதிலிருந்து இந்த வழக்கின் போக்கு முற்றிலுமாக மாறியது. உடன் நிகழ்வாக, சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் மாற்றப்பட்டார். பின்னர், வழக்கு விசாரணை, நீதிபதி லோயாவிடம் மாற்றப்பட்டது.
2014 டிசம்பர் ஒன்றாம் தேதி நாக்பூரில் நீதிபதி லோயா உயிரிழக்க, பல்வேறு ஊகங்களும் சர்ச்சைகளும் தொடர்கின்றன. நீதிபதி லோயா மரணத்திற்கு பிறகு வழக்கு விசாரணை முற்றிலும் வேறு திசைக்கு மாற்றப்பட்டது. 2014 டிசம்பரில் அமித் ஷா உள்ளிட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.

இறுதியில் வழக்கே முற்றிலும் நீர்த்துப்போனது, போதிய ஆதாரங்களை அரசு தரப்பில் அளிக்கப்படாததால், குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து மும்பையில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்காக வருத்தப்படுவதாக நீதிபதி ஜே.எஸ்.சர்மா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை சந்தித்துள்ளது. அதில், இதுவும் ஒன்று. இருப்பினும் வரலாறு நெடுகிலும் நீதியே வெற்றி பெற்றுள்ளது. சொராபுதீன் ஷா வழக்கு, மர்மமா அல்லது மர்ம முடிச்சி அவிழுமா என்பதற்கு காலம் விடையளிக்கும்.
source: ns7.tv