ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமா ராவிற்கு 109 அடி சிலையுடன் கூடிய நினைவுச்சின்னத்தை அமைப்பது குறித்த புதிய அறிவிப்பை ஆந்திர மாநில அரசு அறிவித்திருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரூ. 2,500 கோடி மதிப்பீட்டில் மகராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜிக்கு சிலை, 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு "Statue of Unity" சிலை, உத்தரப்பிரதேசத்தில் 221 மீட்டர் உயர ராமர் சிலை, ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் கர்நாடகாவில் காவிரி தாய்க்கு சிலை என ஒவ்வொரு மாநிலங்களிலும் சிலைகள் அமைப்பது டிரெண்டாக மாறிவிட்ட சூழலில் ஆந்திர மாநில அரசும் அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தில் தலைவர்களுக்கு சிலையா என ஒரு பக்கம் இந்த சிலை விவகாரம் சர்ச்சைக்குரியதாகவும் மாறியுள்ளது. ஆந்திராவிலும் இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
தமிழகத்தின் எம்.ஜி.ஆருக்கு நிகராக வர்ணிக்கப்படுபவர் ஆந்திர முன்னாள் முதல்வரான நந்தமுரி தாரக ராமா ராவ். இவருக்கு சிலை மற்றும் நினைவுச்சின்னம் எழுப்ப தற்போதைய முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் தனியாக பிரிந்ததால் அமராவதி என்ற இடத்தில் ஆந்திராவின் தலைநகர் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குண்டூர் மாவட்டம் நீருகொண்டா கிராமத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில் என்.டி.ஆருக்கு சிலை மற்றும் நினைவுச் சின்னம் கட்டமைக்கப்பட உள்ளது. அருகில் உள்ள 184 ஏக்கர் நிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான பணிகளை எல் & டி நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
இந்த திட்டத்தில் செயற்கையாக ஏரி ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இந்த ஏரியைக் கடந்து அருகில் உள்ள மலை மீது நிறுவப்பட இருக்கும் சிலையை சொகுசுப் படகில் சென்று ரசிக்கலாம். இங்கு தியேட்டர், ஓட்டல்கள், அரங்கு, செல்ஃபி பாயிண்ட், வணிக வளாகங்கள், மால்கள் மற்றும் ரிசார்ட்கள் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன.
இந்த சிலை அமைக்கும் திட்டத்தினை டிரஸ்ட் ஒன்று அமைத்து செயல்படுத்த உள்ளதாகவும், இதற்கான நிதியில் பெரும்பாலான பகுதியினை நன்கொடைகள் மூலம் திரட்டப்படும் எனவும் தெரிகிறது.
அடுத்தடுத்து சிலை அமைக்க மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருவது பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆந்திர முதல்வராக ராமாராவ் இருந்த போது ஹைதராபாத்தில் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையினை அடிப்படையாகக்கொண்டு 58 அடி உயர கவுதம புத்தர் சிலையை நிறுவினார். இதுவே உலகின் அதிக உயரம் கொண்ட ஒற்றைக்கல் புத்தர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.
source: ns7.tv