source ns7.tv
முத்தலாக் மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைபாடு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
முத்தலாக் அவசர சட்டம்... இந்திய முழுவதும் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் நாளை இந்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்கிறது மத்திய பாஜக அரசு... மக்களவையில் கடும் அமளிக்கு இடையில் இந்த மசோதாவை நிறைவேற்ற உள்ளது மத்திய அரசு... காரணம்... தனிப்பெரும்பான்மையுடன் மக்களவையில் உள்ள பாஜகவிற்கு எதிர்க்கட்சிகளின் அமளி மட்டுமே தடையாக இருக்கும் என்பது தான் நிதர்சனம். ஆனால் மாநிலங்களவையில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்ற மாநில கட்சிகளை எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளது பாஜக
மாநிலங்களவையை பொறுத்த வரையில் தனிப்பெரும் கட்சியாக 73 உறுப்பினர்களை கொண்டுள்ளது பாஜக. ஆனால் மசோதாக்களை நிறைவேற்ற இந்த எண்ணிக்கை போதாது என்ற நிலையை தொடர்ந்து அனுபவித்து கொண்டே வருகிறது. பாஜவிற்கு அதிக உறுப்பினர்கள் இருப்பினும், அக்கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 93 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அதே வேளையில் காங்கிரஸ் தலைமை வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும், பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மாநில கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 112...
இந்த எண்ணிக்கையை கொண்டு முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றி விட முடியாது என்பதை பாஜக உணர்ந்தே உள்ளது. அதே வேளையில் பாஜக கூட்டணியில் இடம் பெறாத, அதே வேளையில் ஒரு சில நேரங்களில் பாஜகவை ஆதரிக்க தயங்காத கட்சிகளின் சார்பாக 39 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறிப்பாக தமிழகத்தை சேர்நத அதிமுகவிற்கு 13 உறுப்பினர்களும், ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு 9 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த 2 கட்சிகளும் பல்வேறு விவகாரங்களில் பாஜகவை ஆதரித்தவை. அதே வேளையில் முத்தலாக் விவகாரத்தில் இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவிற்கு எதிரான நிலைபாட்டையே மக்களவையில் எடுத்தன. எனவே அதிமுகவின் நிலைபாடு இந்த விவகாரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அதே வேளையில் வாக்கெடுப்பை புறக்கணிக்க அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவையை பொறுத்த வரை அரசியல் சாசன மசோதாவிற்கு, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அவையில் இருந்து, அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு தேவை. அதே வேளையில், சாதரண சட்டமாக தாக்கல் செய்யப்பட்டால், அவையில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரில் பாதிக்கு மேற்பட்டவர்களின் ஆதரவு போதுமானது.
முத்தலாக் மசோதா அரசியல் சாசன மசோதாவாக கருதப்பட்டாலும், சாதரண மசோதாவாகவே தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் பின்னணியில் அதிமுகவின் புறக்கணிப்பு என்பதை கருத்தில் கொண்டிருக்கலாம் என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அப்படி அதிமுக வெளிநடப்பு செய்தாலும் மற்றக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தாலும், மசோதா நிறைவேறுவதில் சிக்கல் உள்ளது. அதே வேளையில் அதிமுக ஆதரித்து வாக்களித்தால் அது மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைப்பாக இருக்கும். அதே வேளையில் அதிமுக எதிர்த்து வாக்களிக்குமானால், மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.