தமிழக காவல்துறையினர் பயன்பாட்டில் உள்ள மொபைல் ஆப் ஒன்று 150 மில்லி நொடிகளில் குற்றவாளியை கண்டறிய உதவியுள்ளது.
அண்மையில் வளசரவாக்கம், கே.கே.நகர், தி,நகர் உள்ளிட்ட சென்னையின் சில பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்சியாக நடைபெற்றுவந்தன.
இந்த பகுதிகளில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் அனைத்திலும் ஒரே நபரே ஈடுபட்டதை, சிசிடிவி காட்சிகளில் மூலமாக காவல்துறையினர் தெரிந்துகொண்டனர்.
இந்த சிசிடிவி காட்சியைத் தவிர காவல்துறையினருக்கு வேறு ஏதும் துப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் காவல்துறையினருக்கு குற்றத்தில் ஈடுபட்டது யார் என்பதனை Facetagr என்ற மொபைல் செயலி காட்டிக்கொடுத்துள்ளது.
செயின் பறிப்பு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சியை Facetagr செயலியில் பதிவேற்றம் செய்து பழைய குற்றவாளிகளில் யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்களோ என்று சோதனை செய்த காவல்துறையினர், அந்த சம்பவத்தில் ஈடுபட்டது கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரபல திருடனான ஸ்ரீநிவாசன் என்று அழைக்கப்படும் பர்மா ஸ்ரீநிவாசன் என்று தெரியவந்தது. இவன் கடந்த 20 ஆண்டுகளாகவே திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.
Facetagr செயலி வாயிலாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், மாநிலத்தின் எந்தப் பகுதியில் அதனை செய்திருந்தாலும், காவல்துறையினரால் மிகக் குறைந்த நேரத்தில் அதனை கண்டறிய முடியும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்ப வசதி தமிழக காவல்துறையினருக்கு தற்போது பலன் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 67,000 குற்றவாளிகளின் புகைப்படங்களும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த 8,000 குற்றவாளிகளின் புகைப்படங்களும், மாநில குற்ற ஆவண காப்பகத்தால் இந்த மொபைல் செயலியின் சேமிப்புத் தளத்தில் (Database) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் மட்டுமல்லாது குற்றவாளி வீடியோவில் இருந்தால் கூட இந்த செயலி அவரை எளிதாக கண்டறிந்துவிடுகிறது.
சிசிடிவி காட்சிகள் சுமாரான தரத்தில் (குறைந்தபட்சம் 100 பிக்ஸல்) இருந்தால் கூட போதுமானது, இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோ மூலம் குற்றவாளிகளின் புகைப்பட நூலகத்தில் இருக்கும் புகைப்படங்களோடு ஒப்பீடு செய்து இந்த செயலியால் அந்த நபரை கண்டறிய இயலும்.
தமிழகம், புதுவை மட்டுமல்லாது விரைவில் ஆந்திரா, கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த குற்றவாளிகளின் புகைப்படங்களும் இந்த செயலியின் டேட்டா பேஸில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அப்போது தென்மாநில குற்றவாளிகள் எந்த மாநிலத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டாலும் காவல்துறையினரால் உடனடியாக கண்டறிய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.