அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக இணக்கமான தீர்வு காண அமைக்கப்பட்ட மத்தியஸ்த குழு அறிக்கை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா உள்ளிட்ட 3 அமைப்புகள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த மார்ச் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழுவை நியமித்தது. இக்குழுவில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இடம்பெற்றனர். 8 வார காலத்திற்குள் இக்குழு இணக்கமான தீர்வை காண வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இக்குழு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இக்குழு கடந்த 6ம் தேதி தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் இணக்கமான தீர்வு காண மத்தியஸ்த குழு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் அளிப்பதாக அரசியல் சாசன அமர்வு அறிவித்தது. மேலும், பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக நீதிமன்றம் எதையும் வெளிப்படுத்தாது என்றும், அதன் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.