1984ல் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து ஆட்சேபிக்கத்தக்க வகையில் பேசியிருப்பதால் காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
1984ல் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவரது பாதுகாப்பு படையில் இருந்த சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலரின் ஆதரவுடன் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்த சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் சுமார் 8,000 முதல் 17,000 வரையிலானவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சாம் பிட்ரோடா, “அது நடந்தது 1984ல், அதனால் என்ன?” என்று கூறியிருந்தார். சாம் பிட்ரோடா இவ்வாறாக பேசியது அரசியல் அரங்கை அதிரச்செய்தது. காங்கிரஸ் தலைவர் இதில் தலையிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
இதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சாம் பிட்ரோடா பேசியிருப்பது தேவையற்றது, 1984ல் நடைபெற்ற துயரம் வலிகளை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பான பேச்சுக்காக சாம் பிட்ரோடா நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது குறித்து அவரிடம் நான் பேசுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்காக மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்டுள்ளனர், எங்களது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவாக கூறியுள்ளோம், இது போன்றதொரு துயரம் எப்போதும் நடைபெறக்கூடாது, என்று அதில் ராகுல் கூறியுள்ளார்.
இதனிடையே எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக கூறிய சாம் பிட்ரோடா, நமக்கு வேறு பல கடமைகள் உள்ளது, இதில் இருந்து வெளிவருவோம் என்ற அடிப்படையிலேயே நான் அவ்வாறு கூறியதாக குறிப்பிட்ட அவர் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
source ns7.tv