சனி, 11 மே, 2019

பயணிகளுக்கு அதிரடி சலுகையை அறிவித்த ஏர் இந்தியா நிறுவனம்!

source ns7.tv
Image
விமான நிறுவனங்களின் வழக்கமான செயல்பாட்டிற்கு நேர் எதிரான நடவடிக்கை ஒன்றை எடுத்து ஏர் இந்தியா நிறுவனம் பிரமாதப்படுத்தியுள்ளது.
அவசர தேவைக்காக வெளியூர்களுக்கு கடைசி நேரத்தில் விமானங்களில் பயணிப்போரை கவலைக்குள்ளாக்கும் விஷயம் அதிக விலையிலான டிக்கெட் கட்டணமே. ஏறக்குறைய எந்த விமான நிறுவனமானாலும் சரி கடைசி நேர விமான பயணம் என்பது அதிக செலவானதாகவே இருக்கும். பெரும்பாலான நிறுவனங்களும் இந்த வகையிலேயே டிக்கெட் வருமானத்தை ஈட்டும்.
இந்நிலையில் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் நேர் எதிராக கடைசி நேர விமான பயணத்திற்கான டிக்கெட் கட்டணத்தில் 40% தள்ளுபடி அறிவித்து புதுமை படைத்துள்ளது மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா.
டெல்லியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வணிக ஆய்வுக்கூட்டத்தில் நாளை (11-05-19) முதல் உள்ளூர் வழித்தடங்களின் விமான சேவைகளில் பயணத்திற்கு 3 மணி நேரத்திற்குள்ளான காலியாக இருக்கும் Economy பிரிவு இருக்கைகளுக்கு 40% விலையில் தள்ளுபடி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக இறுதிக் கட்டத்தில் டிக்கெட் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு விமான நிறுவனங்கள் உயர்த்தியே விற்பனை செய்யும், ஆனால் அதற்கு நேரெதிராக ஏர் இந்தியா புதுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் அதிகளவில் விமான பயணங்களை மேற்கொள்பவர்களை ஈர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கை இதர விமான நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.