NS7/tv
கடும் வறட்சி... ஆனாலும் வேளாண்மையில் கலக்குகிறார் நாகையைச் சேர்ந்த ஒரு விவசாயி.
கோடை காலத்தில் கிடைக்கும் குறைவான தண்ணீரை பயன்படுத்தி நாகை மாவட்ட விவசாயிகள் பலரும் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கீழ்வேளூரை அடுத்த ஆத்தூரை சேர்ந்த குணசேகரன், தனக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தில் பருத்தியை பயிரிட்டுள்ளார். பருத்தி சாகுபடிக்கு அதிகம் தண்ணீர் தேவையில்லை என்பதால் ஊடுபயிராக மக்காச்சோளத்தையும் குணசேகரன் பயிரிட்டுள்ளார். இந்த யோசணைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக குணசேகரன் கூறுகிறார் .
பருத்தி அறுவடைக்கு முன்பாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுவிடுவதால் சோளக்கதிர் மூலம் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் லாபம் தருவதாக குணசேகரன் தெரிவிக்கிறார். இதன் மூலம், பருத்தி சாகுபடிக்கான செலவுகளையும் தன்னால் சமாளிக்க முடிவதாகவும் குறிப்பிடுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக பருத்தி சாகுபடியின் போது ஊடுபயிராக சோளக்கதிர் பயிரிடுவதால் ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை குணசேகரன் லாபம் ஈட்டி வருகிறார்.
பருத்திக்கு இடையே ஊடுபயிராக சோள விதைகளை விதைப்பதால் அதற்கென தனி செலவோ, உழைப்போ கிடையாது. சோளப்பயிர்கள் கிளைகள் இல்லாமல் நேராக வளர்வதால் பருத்தி பயிருக்கு எந்த பாதிப்போ, இடைஞ்சலோ ஏற்படுத்தாது என கூறுகின்றனர் விவசாயிகள்.
பருத்தியை தாக்க வரும் பூச்சிகள், சோளத்தால் கவரப்படுவதால், பருத்தி பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுகிறது. சோளம் அறுவடை 80 நாட்களில் தொடங்கி 100 நாட்களுக்குள் முடிந்துவிடும். அத்துடன், சோளத்தட்டைகளை மாடுகளுக்கு தீவனமாக விற்பதால், கூடுதலாக வருவாயும் கிடைக்கிறது. இதனால் குணசேகரன் முன்னோடி விவசாயியாக மாறி விட்டார். அவரைப் பின்பற்றி பலரும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.