source ns7.tv
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலிக்க வேண்டியுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. அக்கட்சியின் மூத்த தலைவரான கமல்நாத் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
எதிர் முகாமுக்கு மாறிய வேட்பாளர்:
இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்தக் கூட்டணி சார்பில் குனா மக்களவை தொகுதியின் வேட்பாளராக பகுஜன்சமாஜ் கட்சியின் லோகேந்திர சிங் ராஜ்புத் அறிவிக்கப்பட்டார்.
கொந்தளித்த மாயாவதி:
இதனிடையே கடந்த திங்கள்கிழமையன்று யாரும் எதிர்பாராத வகையில் லோகேந்திர சிங் ராஜ்புத், காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஜோதிராதித்ய சிந்தியாவினை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மாயாவதி, மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என அறிவித்தார்.
மாயாவதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பகுஜன்சமாஜ் வேட்பாளர் மிரட்டப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்க வைக்கப்பட்டுள்ளார். பகுஜன்சமாஜ் தனது சொந்த சின்னத்தில் இத்தொகுதியில் போட்டியிட்டு தகுந்த பதிலடியை கொடுக்கும், தவறான முறையில் அரசு இயந்திரத்தை பயன்படுத்துவதில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வேறுபாடில்லை என மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மாயாவதி வாபஸ் பெரும்பட்சத்தில் நூழிலையில் பெரும்பான்மையை அக்கட்சி இழக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஆட்சி கவிழுமா?
230 இடங்கள் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 113 இடங்களை கொண்டுள்ளது. பகுஜன் சமாஜுக்கு இரண்டு எம்.எல்.ஏக்களும், சமாஜ்வாதி கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏவும் உள்ளனர். இரண்டு சுயேட்சைகள் ஆதரவுடன் மொத்தம் 118 இடங்கள் காங்கிரஸ் வசம் உள்ளது. பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை என்ற நிலையில் மாயாவதி வாபஸ் வாங்கினால் ஆட்சி தப்புமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் அக்கட்சியில் கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ உள்ளார். பாஜகவிற்கு 109 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
கமல்நாத்:
மாயாவதியின் மிரட்டல் குறித்து அம்மாநில முதல்வரான கமல்நாத் கூறுகையில், எந்த ஒரு மனவேற்றுமையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றார்.