ஆந்திராவில் ஒரே ஆண்டில் பசியை தாங்க முடியாத இரண்டு குழந்தைகள் மண்ணை தின்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த மகேஷ் - நீலவேணி தம்பதி, ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கும்மவான் பள்ளியில் கூடாரம் அமைத்து கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில், நீலவேணியின் சகோதரி மகளான வனிதாவையும் வளர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. பசியால் வாடிய அந்தக் குழந்தை மண்ணை அள்ளி தின்றதால், வயிற்றுக் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தை அங்கேயே துடிதுடித்து இறந்தது. செய்வதறியாமல் திகைத்த போன தம்பதி அங்கேயே குழந்தையை புதைத்து விட்டதாக கூறப்படுகிறது.
போலீஸார் நடத்திய விசாரணையில் குடும்பமே பசியால் வாடுவதும், ஓராண்டுக்கு முன்னர் இதே போன்று நீலவேணியின் மூன்றாவது மகனும் மண்ணை தின்று உயிரிழந்ததும் தெரியவந்தது. அவர்களின் நிலை உணர்ந்த காவல் ஆய்வாளர் வெங்கடசாமி, எஞ்சியுள்ள குழந்தைகள் நான்கு பேரையும் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பசியால் ஒரு குழந்தை மண் தின்று இறந்தது அம்மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
source ns7.tv