புதன், 8 மே, 2019

உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மனு தாக்கல்! May 08, 2019

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிகாரங்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மனு தாக்கல் செய்துள்ளது. 
துணை நிலை ஆளுநருக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரத்தை ரத்து செய்யக் கோரி அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு உள்துறை அமைச்சகம் வழங்கிய அதிகாரம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடவும் தடை விதித்தது.
இந்நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள உள்துறை அமைச்சகம், துணை நிலை ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. எனவே, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் மனுவை தாக்கல் செய்த மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். எனினும், அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், பட்டியல்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.