புதன், 8 மே, 2019

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் வறட்சியில் திருநெல்வேலி...! May 08, 2019


Image
திருநெல்வேலி மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவி வருகிறது. பெரும்பாலான அணைகள் வறண்டுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 
தமிழகத்திலேயே அதிகமான அணைகளை கொண்ட மாவட்டங்களில் மிக முக்கியமானது திருநெல்வேலி. குறிப்பாக, தென் மாவட்டங்களின் பிரதானமான நீர் ஆதராமாக இருக்கும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட 11 அணைகள் உள்ளன. இந்த அணைகள் மூலம் தென் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும், நீர் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த ஆண்டு மழை பொய்த்ததால் பெரும்பாலான அணைகள் நீரின்றி வறண்டு போயுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தின் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர் மட்டம் தற்போது 15 அடிக்கும் குறைவாகவே உள்ளது. மழை பொய்த்ததால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் எப்போதும் துவங்கும் முன்கார் சாகுபடியும் இந்த ஆண்டு கேள்விக்குறியாகியுள்ளது. 
வறட்சி காரணமாக குடிநீர் தட்டுபாடும் கடுமையாக எழுந்துள்ளது. அதனால் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய அணைகளில் மிஞ்சி இருக்கும் நீரை மட்டுமே பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே வறண்டுள்ள அணைகளில், தூர்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். அத்துடன் அணைகளில் உள்ள வண்டல் மண், கரம்பை உள்ளிடவைகளை விளைநிலங்களுக்கு அரசு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும், கால்வாய் கரைகளை பலப்படுத்த பயன்படுத்தலாம் எனவும் விவசாயிகள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வறட்சியை சமாளிக்கவும் குடிநீர் தேவை, விவசாயித்திற்கு தேவையான நீர் இருப்பு என நீண்ட கால பயன்பாட்டிற்கு உதவும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.