வியாழன், 9 மே, 2019

இரண்டு அடி உயரத்தில் காய்க்கும் கொய்யா செடியை கண்டுபிடித்து அசத்தியுள்ள பட்டதாரி பெண்! May 09, 2019

source ns7.tv
Image
ஆப்பிள் போன்றவற்றை வெப்பம் நிறைந்த பகுதிகளிலும் விளைவிக்க முடியும் என நிரூபித்த பட்டதாரி பெண் விவசாயியான லஷ்மி, தற்பொழுது இரண்டு அடி உயரத்தில் காய்க்கும் கொய்யா செடிகளை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். 
வேளாண் ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்து பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி விவசாயி வேங்கடபதியின் மகள் தான் லஷ்மி. எம்பிஏ முடித்த இவர், தந்தையை போன்றே விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு, புதுச்சேரி கூடப்பாக்கம் பகுதியில் தனது வீட்டுக்கு பின்புறமே விவசாயம் செய்து வருகிறார். நெய்மணம் கமழும் மிளகாய், குளிர் பிரதேசங்களில் விளையக்கூடிய ஆப்பிளை, வெப்ப பகுதியிலும் விளைவிக்க முடியும், என மெய்ப்பித்தும் காட்டினார். அதன் வரிசையில், தற்போது இரண்டு அடி உயரத்தில் காய்க்கும் கொய்யா செடியினை லஷ்மி கண்டுபிடித்துள்ளார். 
 
கொய்யா விவசாயத்தில் அதிக லாபம் கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுவதை கேட்ட லஷ்மி, கடந்த 2018ம் ஆண்டு முதல் கொய்யா விவசாயத்தில், பல புதிய ரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கினார். அதன் பலனாக, குளோனல் முறையில் செடிகளை உருவாக்கி, பல்வேறு வகையான கொய்யா செடிகளை புதிதாக கண்டுபிடித்துள்ளார்.
தாய்வான் பிங் கொய்யா உண்பதால், நீரிழிவு நோயை தடுப்பதுடன், பலவகையான உடற்சத்துக்களையும் பெறமுடியும் என கூறுகிறார் லஷ்மி. நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாக்க பல்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொண்டு விவசாயிகள் பயன்பெற முடியும் எனவும் உறுதியாக கூறுகிறார் லஷ்மி.