வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓரிரு இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், இயல்பை விட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை, திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளதாகவும், அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் வள்ளாத்தி அணைக்கட்டு பகுதியில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் முகையூரில் 9 செ.மீ மழையும், பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் 6செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
source ns7.tv