செவ்வாய், 14 மே, 2019

மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டாம்" - பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை! May 14, 2019


Image
10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு EMIS இணையதளத்தில் இருந்து மாற்றுச்சான்றிதழ்கள் ( TC ) வழங்கப்பட்டு வருகிறது. மாணவரின் டி.சி.யில் மாணவர் எந்த சாதியையும் சாராதவர் என்று குறிப்பிட்டு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மாணவரின் டி.சி.யில், Refer Community Certificate issued by Revenue Dept என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் சாதிச்சான்றிதழ் தனியாக வழங்கப்பட்டு வருகிறது.
 தனியாக சாதிச்சான்றிதழ் வழங்குவதால், டி.சி.யில் மாணவரின் சாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெளிவு படுத்தியுள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட மாணவர் அல்லது மாணவரின் பெற்றோர் / பாதுகாவலர் விருப்பப்பட்டால் சாதி இல்லை / சமயம் இல்லை என்று குறிப்பிட்டு டி.சி.யை வழங்க வேண்டும்.
மாணவர் அல்லது பெற்றோர் சாதி தொடர்பான கேள்வியை நிரப்ப வேண்டாம் என்று தெரிவித்தால் அந்த இடத்தை காலியாக விட்டு, அவர்களுக்கு டி.சி.யை வழங்க பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் முறையாக தெரிவித்து அதன் பேரில் டி.சி.யை வழங்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான அறிவுறுத்தலை பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் வழங்கியுள்ளார்.