புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக, துணை சபாநாயகர் பொறுப்பில் இருந்த சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வாகிறார்.
புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனால், சபாநாயகர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக புதிய சபாநாயகரை தேர்வு செய்ய துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று நண்பகல் 12 மணிக்குள் மனுதாக்கல் செய்ய சட்டப்பேரவைச் செயலர் அறிவித்தார்.
எதிர்க்கட்சிகள் யாரையும் முன்மொழியாத நிலையில், காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்துவை சபாநாயகராக முன் மொழிந்து, சட்டப்பேரவை செயலரிடம் மனுதாக்கல் செய்யப்பட்டது. பகல் 12 மணியுடன் நேரம் முடிவடைந்ததால், சிவக்கொழுந்து சபாநாயகராக தேர்வாவது உறுதியாகி உள்ளது. துணை சபாநாயகராக காங்கிரஸ் உறுப்பினர் பாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. நாளை நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.