திங்கள், 3 ஜூன், 2019

டெல்லி மெட்ரோ ரயில்கள், பஸ்களில் மகளிருக்கு இனி பயணம் இலவசம்! June 03, 2019

Image
சட்டமன்ற தேர்தல் நடைபெற சில மாதங்களே இருக்கும் நிலையில் மெட்ரோ, ரயில்கள், மாநகர பேருந்துகள், கிளஸ்டர் பேருந்துகளில் இனி மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளார்களை சந்தித்த போது, ஆம் ஆத்மி கட்சி மகளிர் பாதுகாப்புக்கு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் எங்கள் அரசு இரு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. முதலாவது டெல்லி மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது, மற்றொன்று பொது போக்குவரத்து பயணத்தை மகளிருக்கு இலவசமாக தருவது. 
இனிமேல் அனைத்து மாநகர பேருந்துகள், கிளஸ்டர் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர், இதன் மூலம் அதிக கட்டணம் கொண்ட பொதுப் போக்குவரத்தை அவர்கள் இனி அதிகமாக பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்பாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மாநில அரசும் மத்திய அரசும் சரிசம பங்குதாரர்கள் என்பதால் டெல்லி அரசின் இந்த அறிவிப்புக்கு மாநில அரசு ஏதேனும் முட்டுக்கட்டை போடுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அனுமதி எங்களுக்கு தேவையில்லை, இந்த வகையில் ஏற்படும் இழப்பை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று கூறினார்.
டெல்லி அரசின் இந்த நடவடிக்கை காரணமாக சுமார் 700 கோடி ரூபாய் மாநில அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி படுதோல்வியை தழுவியது, அதே நேரத்தில் 2020ல் சட்டமன்ற தேர்தலையும் டெல்லி எதிர்நோக்கியுள்ளது, இந்த நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுப்போக்குவரத்தில் மகளிருக்கு இலவச பயணம் என்ற அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தகக்து.