திங்கள், 3 ஜூன், 2019

வறண்ட நிலத்தை பசுமையாக்கி கணவனை இழந்த பெண் சாதனை! June 03, 2019

Image
மதுரை பூச்சமப்பட்டி கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் விவசாயத்தில் சாதனை செய்து வருகிறார்.
மதுரை பூச்சம்பட்டி கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்புவரை கரம்பாகக் கிடந்த நிலம், தற்போது, மிளகாய்... கத்தரிக்காய்....வெண்டைக்காய் விளைந்து பசுமையாக மாறியுள்ளது. தனி ஒரு பெண்ணாக நிலத்திற்கு உயிரூட்டி, அதன் பசுமையை மீட்டவர் விவசாயி பேச்சியம்மாள்.
கணவர் இறந்த பிறகு, சராசரி பெண்களைப் போல் வீட்டில் முடங்கிக் கிடக்காமல், வயல்வெளியில் இறங்கி, விளை நிலங்களைச் செழிக்கச் செய்து, விவசாயத்தைப் பெருக்கியுள்ளார் பேச்சியம்மாள்...தமது மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியதற்கு விவசாயமே கைகொடுத்தாக கூறுகிறார் இந்த தன்னம்பிக்கை விவசாயி.
பேச்சியம்மாளின் விளைநிலத்தில் உள்ள கிணற்று நீரையே சுற்றுவட்டாரத்தில் உள்ள 4 கிராம மக்கள் இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே இருக்கும், பூச்சம்பட்டி கிராமத்தின் விளைநிலங்கள் செழிக்க பேச்சியம்மாளின் தோட்டமே நீராதாரமாக திகழ்வதாக கூறப்படுகிறது.
விவசாயம் செய்ய ஆண்களே மிகுந்த சிரமப்படும் இந்த காலக்கட்டத்தில், தனி ஒரு பெண்ணாக விளைநிலங்களைக் கவனித்து, மகசூலை ஈட்டி வருகிறார் விவசாயி பேச்சியம்மாள்.. சொட்டுநீர் பாசன திட்டத்திற்கான நிதி உதவி கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், அதனை முறையாக அளித்தால், குறைந்த நீரில், அதிக மகசூலை ஈட்ட முடியும் என கூறுகிறார் பேச்சியம்மாள்.