credit ns7.tv
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவதற்கான தகுதித்தேர்வு வரும் 7-ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நீட் மற்றும் JEE போட்டித்தேர்வுக்கு தேர்வு செய்யப்பட உள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தகுதித் தேர்வுகள் வரும் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என்றும், தேர்வுக்கான வினா மற்றும் விடைக்குறிப்புகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தகுதித்தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் வரும் 12-ம் தேதிக்குள் dsejdv@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தகுதித் தேர்வைத் தொடர்ந்து, வரும் 9-ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கு குறுந்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2019 - 2020-ம் கல்வியாண்டில் அதிக மாணவர்களை நீட் மற்றும் JEE போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் நோக்கில், இந்த தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.