தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரியும், 10 நாட்களுக்குள் தேர்தல் தேதியை அறிவிக்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகாலம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடத்ததால், உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சி பணிகள் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் கிடைக்காமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனே உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தி உள்ளார். இந்த மனு, வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் கடந்த (2017) ஆண்டு அக்டோபர் மாதம் தமழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 2018 ஜனவரி மாதம் தொகுதி வரையறை செய்யும் பணிகள் நிறைவடையும் எனவும், அதனடிப்படையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என கூறியிருந்தது.