
இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து, இன்று அதிகாலை புறப்பட்டுச்சென்ற உள்ளூர் பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 6.20 மணிக்கு, லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ரக விமானம் புறப்பட்டுச்சென்றது. விமானத்தில் 188 பயணிகள் உள்பட 189 பேர் பயணம் செய்தனர். ஜகார்தாவில் இருந்து பங்கால் பினாங் பகுதிக்கு செல்ல சுமார் 1 மணி நேர பயண தூரம் உள்ள நிலையில், விமானம் புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என இந்தோனேசிய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
விமானத்தில் பயணம் செய்த பயணிகள் நிலை குறித்து எதுவும் தெரியாததால், பயணிகளின் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதேபோன்று, கடந்த 2013ம் ஆண்டு 108 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.