செவ்வாய், 30 அக்டோபர், 2018

​ஸ்ரீவைகுண்டம் அருகே கி.மு10000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருவிகள் கண்டெடுப்பு! October 30, 2018



ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கி.மு10000 ஆண்டுகள் முற்பட்ட இடைகற்கால கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

சிவகளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை ஆராய்ச்சி செய்து வரும் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமர குருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர்  மாணிக்கம் என்பவர் சிவகளையில் உள்ள தரிசுகுளம் மற்றும் தம்ளார் மூக்கு ஆகிய பகுதிகளை ஆராய்ச்சி செய்தபோது அங்கு இடைகற்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய 102 கற்கருவிகளை இந்திய தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா வழிகாட்டுதல் படி கண்டுபிடித்துள்ளார்.

வரலாற்றுக்கு முற்பட்டகாலத்தை கற்காலம் மற்றும் உலோககாலம் என வகைப்படுத்துவார்கள். கற்காலத்தை பழங்கற்காலம் அல்லது ஐஸ் ஏஜ் என்றும் இடைகற்காலம் அல்லது மேசோலிதிக் ஏஜ் என்றும் புதிய கற்காலம் அல்லது நியோலிதிக் ஏஜ் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிவகளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கருவிகள் அனைத்தும் இடைகற்காலத்தில் மனிதன் பயன்படுத்திய இடைக்கற்கால நுண்கற்கருவிகள் ஆகும்.

இடைக்கற்காலம் என்பது பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட கற்காலம் ஆகும். இக்காலம் தான் மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்ப காலம் என்றும் கருதப்படுகிறது. இக்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் நுண்ணிய கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளார்கள்.

இக்கற்கருவிகள் அகேட், செர்ட், ஜாஸ்பர் போன்ற கற்களால் உருவாக்கப்பட்டன. இவை அதிகபட்சம் ஐந்து சென்டிமீட்டர் அளவையுடையதலால் இவைகளை நுண்கருவி அல்லது மைக்ரோலித் என்று அழைக்கப்படுகிறது. இக்கருவிகள் முக்கோன வடிவகருவி சுரண்டும் கருவி, பிறைவடிவகருவி என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கருவிகள் அனைத்தும் நுண்ணிய மற்றும் கூர்மையானவைகள் என்பதால் இவைகளை கொண்டு மான், பன்றி, ஆடு மற்றும் எலி போன்ற விலங்குகளை வேட்டையாடியுள்ளனர். வேட்டையாடிய விலங்குகளின் தோல் மற்றும் இறைச்சிகளை வெட்டுவதற்கு கூர்மையான நுண்ணிய கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.

இடைக்கற்காலத்தில் மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடுதல் முக்கிய தொழில்களாக இருந்துள்ளன. இக்கற்காலத்தில் மனிதர்கள் ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்கி வாழ்ந்துள்ளனர். மேலும் பிராணிகளை வளர்த்தல் தோட்டப்பயிரிடுதல் தொடக்கால வேளாண்மை போன்ற நடவடிக்கைகளை இக்காலத்தில் தான் மனிதர்கள் தொடங்கியுள்ளனர்.

சிவகளையில் தாஜீசு பகுதியை சுற்றிலும் நீர்நிலைகளும் காடுகளும் சூழ்ந்து காணப்படுவதால், இப்பகுதியில் இடைக்கற்கால மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான எச்சங்கள் அதிகம் காணப்படுகின்றன.பொதுவாக இடைக்கற்காலத்திற்குரிய எச்சங்கள் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. இவைகள் பெரும்பாலும் ஆற்றுப்படுக்கைகளில்தான் காணப்படுகின்றன.

தற்போது சிவகளை தரிசில் இடைக்கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது இப்பகுதியில் பழங்காலத்தில் தாமிரபரணி ஆறு ஓடியதற்கான சான்றாக உள்ளது. சிவகளை தரிசுகுளத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடைக்கற்கால கருவிகளைபோல சாயர்புரம் மெஞ்ஞானபுரம் கூட்டாம்புளி, கூத்தன்குழி, சாயர்புரம், கட்டாலங்குளம், குளத்தூர், புத்தன்தருவை, சூரங்குடி, நாசரேத், மானாடு, காயாமொழி போன்ற ஊர்களிலுள்ள தேரிகாடுகளிலும் இக்கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கண்டெடுக்கப்பட்டுள்ள இக்கருவிகள் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமர குருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளி பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவைகளை பள்ளி கல்வி அபிவிருத்தி சங்கசெயலாளர் கோட்டை சண்முகநாதன், தலைமை ஆசிரியர் முத்துசிவன், வரலாற்று ஆசிரியர்கள், முத்தையா, குப்புசாமி, லெட்சுமி, சித்ரா மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டனர்.