சனி, 27 அக்டோபர், 2018

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்: பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே October 26, 2018

Image

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, அந்நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து, பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இலங்கையில் முன்பு அதிபராக இருந்த ராஜபக்சே, தற்போது பிரதமராக பதவியேற்றுள்ளார். அதிபர் மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில், அவருக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கையின் 11-வது பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுள்ளது, தமிழர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரதமர்  பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை, என்றும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவேன் என்றும், ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை, தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஒருவர் பதவியில் இருக்கும்போது, இன்னுமொருவருக்கு பிரதமர் பதவியினை வழங்க, அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும் ரணில் கூறியுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம், பிரதமரை பதவி நீக்குதல், அல்லது பிரதமர் தனது பதவியினை ராஜினாமா செய்வதன் மூலம் மட்டுமே, புதிய பிரதமரை அதிபர் தேர்வு செய்யமுடியும் என்றும், ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது ஆதரவாளர்களுடன் ரணில் விக்ரமசிங்கே அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே, கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சில் பங்கேற்க, சென்னை வந்த இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம், ராஜபக்சே பிரதமரானதை ஏற்க முடியாது என்றும், அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், என்றும் தெரிவித்தார். மேலும், அரசியல் குழப்ப நிலை காரணமாக, தான் உடனடியாக இலங்கை திரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.