வெள்ளி, 26 அக்டோபர், 2018

"ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப்? மே...மே...மே..": ரஜினியை கடுமையாக விமர்சித்த முரசொலி நாளிதழ்! October 26, 2018

Image


ரசிகர்களுக்கான நடிகர் ரஜினியின் எச்சரிக்கை கடிதம் குறித்து திமுக நாளேடான முரசொலியில் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப் மே...மே...மே.. என்ற தலைப்பில் முரசொலியில்  வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், ஊர் ஊராக தெருத்தெருவாக  மன்றம் அமைத்து திரைப்படம் ரிலீசாகும் நாளே திருநாள் என்று வானவேடிக்கை எல்லாம் நடத்தி கொண்டாடிய ரசிகர்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா? என ரஜினியை கேள்வி கேட்டுள்ளது. புகழ் பாடி போஸ்டர் அடித்து ஒட்டியதையெல்லாம் பார்த்து ரசித்து கொண்டு இருந்தாய், ரசிகர்கள்  எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை தாங்கள் அறிய மாட்டீரா? என்று கேட்கப்பட்டுள்ளது. 

அப்போதெல்லாம் வாய் மூடிக் கொண்டு இருந்துவிட்டு தற்போது புத்திமதி சொல்லப்புறப்பட்டிருப்பது தான் நேர்மையா என்றும் முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. 30, 40 ஆண்டுகள் திரையில் நடித்தது மட்டுமே முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும்போது, இத்தனை ஆண்டுகாலம் உயர்த்திப் பிடித்த ரசிகர்களுக்கு அரசியலில் ஈடுபட தகுதி இல்லை என்பது எத்தகைய நியாயம் என ரஜினி ரசிகர்கள் கேட்பதாக  முரசொலியில் கேட்கப்பட்டுள்ளது. 

குடும்பத்தை, மனைவி, மக்களை பார்த்துக்கொண்டு தாங்கள் இருக்க வேண்டியதுதானே என குறிப்பிட்டுள்ள முரசொலி, ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியபோதிலும், அதற்கான  கொள்கையை எப்போதாவது அறிவித்தீர்களா என்றும் ரஜினியை வினவியுள்ளது. தங்களுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க  கிடைக்க , ரசிகர்கள் மட்டும்  நாயாய் பேயாய் உழைக்க வேண்டுமா என்றும் முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டள்ளது.