வெள்ளி, 26 அக்டோபர், 2018

ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ தலையிடுவதை தடுக்கவே அலோக் வர்மா மீது நடவடிக்கை! October 25, 2018


Image

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் நடந்த முறைகேட்டைப் பற்றி விசாரிப்பதை தடுக்கவே, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் ஒரு அதிகாரியிடம், சிபிஐயின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார். இதன் மூலம் தன் மீது எந்தவிதமான நெருக்கடியும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள பிரதமர் மோடியால் முடியும் என்று தெரிவித்த ராகுல், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நள்ளிரவில் திடீரென அகற்றப்பட்டதன் பின்னணியும் இதுதான் எனக் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் ஒன்றிணைந்தே சிபிஐ இயக்குநரை நீக்க முடியும் என்ற அரசியலமைப்புச் சட்டம் இருக்கும் நிலையில், அதனை பிரதமர் மோடி அவமதித்து விட்டதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

சிபிஐ எனப்படும் இந்தியாவின் மதிப்பு மிக்க தேசிய நிறுவனம் மீது திடீர் தாக்குதல் நடத்தியிருக்கும் பிரதமர் மோடி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்திற்கு ரஃபேல் ஒப்பந்தம் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து கொடுத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். ஊழலில் ஈடுபட்டதால் பீதியில் இருக்கும் பிரதமர் மோடி, சிபிஐ விசாரணை அரசியல் வாழ்க்கையை கெடுத்து விடும் என்று தெரிந்த காரணத்தாலேயே, பல்வேறு விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.

ரஃபேல் பேரம் குறித்து விசாரிக்கும்படி பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மற்றும்  வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் அலோக் வர்மாவை சந்தித்து எழுத்துப் பூர்வமாக வேண்டுகோள் விடுத்ததையும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.





source:
http://ns7.tv/ta/tamil-news/india/25/10/2018/action-against-alok-verma-stop-cbi-intervention-rafal-case