லஞ்ச வழக்கில் கைதுசெய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாகன தகுதி சான்று வழங்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கடந்த மாதம் 11ம் தேதி முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே பாபு தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி கோதண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை தொடர்வதால் ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல் 15 நாள் காவல் முடிந்ததையடுத்து, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பாபு, விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ப்ரியா முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது விசாரணை நடத்திய நீதிபதி, அடுத்த மாதம் 2ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.