இலங்கை அரசு அறிவித்துள்ள கடற்தொழில் பாதுகாப்பு சட்டத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் வேதாந்த குழுமத்திற்கு மீத்தேன் எடுக்க 2 இடங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து சூழ்ச்சி செய்வதாக குற்றஞ்சாட்டினார். நாடார் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ள சி.பி.எஸ்.சி பாடத்திட்டதை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய வைகோ, 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்ட பின்னரும் தமிழக ஆளுநர் தாமதம் செய்வது கண்டனத்துக்கு உரியது என்றும் கூறினார்.
இலங்கை அரசின் புதிய கடற்தொழில் பாதுகாப்பு சட்டத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், மீனவர்கள் என்றால் நாதியற்றவர்கள் என்கிற நிலையை மத்திய அரசு உருவாக்கி உள்ளதாகவும் வைகோ குற்றஞ்சாட்டினார்.