வியாழன், 18 அக்டோபர், 2018

​இந்திய ரயில்வேதுறையின் முதல் சுரங்கப்பாதை ரயில் நிலையம்! October 18, 2018

Image


இந்தியாவில் முதல் முறையாக ரயில்வேதுறை சார்பில் சுரங்கப்பாதைக்குள் ரயில் நிலையம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது. இது தொடர்பான விரிவான தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்.

சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்கள் சிலவற்றில் மெட்டோ நிலையங்கள் சுரங்கப்பாதைக்குள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஹிமாச்சல் பிரதேசத்தின் கீலாங் எனுமிடத்தில் இந்தியாவின் முதல் சுரங்க ரயில் நிலையத்தை இந்திய ரயில்வே அமைக்க உள்ளது.

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர் நகரத்திற்கும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லே பகுதிகளையும் இணைக்கும் விதமாக 498 கிமீ நீள சுரங்க ரயில்பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட சர்வே பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த குறிப்பிட்ட ரயில் பாதையில் இந்தோ திபெத்திய எல்லையில் இருந்து 120 கிமீ தொலைவிலும், மணாலியில் இருந்து மேற்கே 26 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள கீலாங் (Keylong) எனும் நகரில் சுரங்கத்திற்குள்ளேயே ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வேயின் தலைமை பொறியாளர் டி.ஆர்.குப்தா தெரிவித்துள்ளார். இதுவே இந்திய ரயில்வே சார்பில் கட்டமைக்கப்படும் முதல் சுரங்க ரயில் நிலையம் என்ற அந்தஸ்தை பெறப் போகிறது. இது கடல்மட்டத்தில் இருந்து 3000 மீட்டர்கள் உயரத்தில் அமையும்.

இந்த ரயில்பாதை கட்டமைக்கப்படும் போது பிலாஸ்பூர் மற்றும் லே நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள முக்கிய நகரங்களான சுந்தர்நகர், மாண்டி, கீலாங், கோக்சார், தர்சா, உப்ஷி மற்றும் கரு போன்ற காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் மாநில நகரங்கள் ரயில் மார்க்கமாக இணைக்கப்படும்.

இந்தோ - திபெத் மற்றும் இந்திய - சீனா எல்லைகளுக்கு அருகில் அமையவிருக்கும் இந்த ரயில் பாதை மூலம் எல்லைப்பகுதிகளுக்கான படைக்கலன், சரக்கு, துருப்புகள் மற்றும் போக்குவரத்து எளிமை பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

74 சுரங்க பகுதிகள் (Tunnels), 124 பெரிய பாலங்கள் மற்றும் 396 சிறிய பாலங்கள் இப்பாதையில் அமைய இருக்கின்றன.
இந்தப்பாதை அமைக்கப்பட்ட பின்னர் டெல்லியில் இருந்து லே செல்வதற்கான தற்போதைய பயண நேரம் பாதியாக குறைக்கப்படும் என தெரிகிறது. 

இந்த ரயில் பாதையில் மற்றொரு சிறப்பு அம்சமும் இடம்பெறப் போகிறது. இப்பாதையில் 5,359 மீட்டர் உயரத்தில் Taglang La ரயில் நிலையம் கட்டமைக்கப்படும் போது, அது உலகின் அதிக உயரத்தில் உள்ள ரயில் நிலையமாக இருக்கும். தற்போது சீனாவின் Qinghai மாகாணத்தில் உள்ள Tanggula ரயில்நிலையமே உலகின் அதிக உயரத்தில் இருக்கும் ரயில் நிலையம் ஆகும்.