செவ்வாய், 9 அக்டோபர், 2018

தூத்துக்குடி கலவரம்: 20 அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்தது சிபிஐ October 9, 2018

Image


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது வெடித்த கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக தனது விசாரணையை தொடங்கியுள்ள சிபிஐ,  20 அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.  

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக்கோரி கடந்த மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, நடைபெற்ற வன்முறையின்போது  போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரியும், போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும், உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், நீதி விசாரணை கேட்டும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. 

உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அடங்கிய, டிவிஷன் பெஞ்ச், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் மீதான உத்தரவை தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான உத்தரவை வழங்கிய நீதிபதி சி.டி.செல்வம்  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ள சி.பி.ஐ. முதற்கட்டமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது வெடித்த கலரவம் தொடர்பாக  20 அமைப்புகள் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.