வியாழன், 11 அக்டோபர், 2018

டிட்லி புயல் தாக்கிய ஒடிசா, ஆந்திரா மாநிலங்களில் மீட்பு பணிகள் தீவிரம்! October 11, 2018

Image

ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களை அச்சுறுத்திய டிட்லி புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்ததாற்றழுத்த தாழ்வு நிலை, பின்னர் புயலாக மாறிய நிலையில், அதற்கு டிட்லி எனப் பெயடப்பட்டது. அந்த புயல் இன்று அதிகாலை ஒடிசா மாநிலத்தில் கோபால்பூருக்கும் ஆந்திர மாநிலத்தின் கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையொட்டி தீவிர முன் எச்சரிக்கைகள் இருமாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குறிப்பாக  ஒடிஸாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் வானிலை மையம் அறிவித்தபடி இன்று அதிகாலை கோபால்பூருக்கும்- கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே டிட்லி புயல் கரையைக் கடந்தது. சுமார் 4 மணி நேரம் வரை இந்த நிகழ்வு நீடித்தது. டிட்லி கரையைக் கடக்கும்போது, அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசியது.  இதனால் கோபால்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு பிய்த்து எறியப்பட்டன. கூரைகள் பிய்த்து எறியப்பட்டு ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தததால் புயல் தாக்கிய பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. காலை முதல் அங்கு கனமழை பெய்து வருகிறது.

புயல் கரையை கடந்தபோது வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள கலிங்கப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக இரு மாநிலங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த சுமார் 1000 பேர் 18 குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீயணைப்புத்துறையினர் மற்றும் உள்ளூர் போலீசாருடன் இணைந்து தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.