ஞாயிறு, 21 அக்டோபர், 2018

Wildlife Photography-இல் உலக சாதனை புரிந்த 10 வயது இந்திய சிறுவன்! October 21, 2018

Image

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் பகுதியை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் என்ற 10 வயது சிறுவன் இந்த வருடத்திற்கான சிறந்த இளம்வயது வைல்ட்லைஃப் போட்டோகிராபர் (Young Wildlife Photographer of the year) விருதினை பெற்றுள்ளார்.

லண்டனில் உள்ள Natural History Museumல் நடைபெற்ற விழாவில் கடந்த செவ்வாய் கிழமை, ஆசிய அளவிலான இந்த விருதை பெற்றார். பைப்பினுள் இருக்கும் இரண்டு ஆந்தைகளை புகைப்படம் எடுத்ததற்காக அர்ஷ்தீப் சிங்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தனது 6ம் வயதிலேயே புகைப்படத்துறைக்குள் நுழைந்த அர்ஷ்தீப் சிங், தன் தந்தையுடன் கபுர்த்தலா என்ற நகரத்திற்கு சென்றுகொண்டிருந்தபொழுது, ஒரு பைப்பினுள் இரண்டு ஆந்தைகள் நுழைவதை பார்த்ததாகவும் அதன் பின்னர் தந்தையிடம் காரை நிறுத்தச்சொல்லி ஆந்தைகள் வெளியே வருவது வரை காத்திருந்து அந்த புகைப்படத்தை எடுத்ததாகவும் தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

மிக பொறுமையாக ஆந்தைகள் வெளியே வரும்வரை காத்திருந்து, கச்சிதமாக புகைப்படம் எடுத்ததற்காக அர்ஷ்தீப் சிங்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என தேர்வாளர்கள் தெரிவித்தனர். அர்ஷ்தீப் சிங்கின் முயற்சியை ஊக்குவிக்கும் விதமாக லண்டன், ஜெர்மனி, இந்தியா போன்ற சில நாடுகளில் உள்ள சில முக்கிய பத்திரிகைகளின் அட்டைப்படமாக அவர் எடுத்த ஆந்தைகளின் புகைப்படம் வெளியிடப்பட்டது.

தனது தந்தையை போலவே தானும் ஒரு சிறந்த வைல்ட்லைஃப் போட்டோகிராபர் ஆக வேண்டும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் அர்ஷ்தீப் சிங்.