வெள்ளி, 19 அக்டோபர், 2018

​ஆதார் எண்களை பயன்படுத்தி பெறப்பட்ட 50 கோடி சிம் கார்டுகளை செயலிழக்கச் செய்யும்

Image

ஆதார் எண்களை பயன்படுத்தி பெறப்பட்ட 50 கோடி சிம் கார்டுகளை செயலிழக்கச் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய தொலைத் தொடர்புத் துறையும், ஆதார் ஆணையமும் கூட்டாக விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளன.

மொபைல் இணைப்புகள் பெறும்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆதார் வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கேட்கவோ, பயன்படுத்தவோ உரிமையில்லை எனக் கூறியிருந்தது. இதன் காரணமாக, ஆதார் எண்ணை நம்பி விநியோகிக்கப்பட்ட சிம் கார்டுகளை வழங்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து புதிய அடையாள விவரங்களை பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக 50 கோடி சிம்கார்டுகள் செயலிழக்கச் செய்யப்படுமா? என்ற அச்சமும் எழுந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத் துறையும், ஆதார் ஆணையமும் கூட்டாக விளக்கமளித்துள்ளன.

ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் வழங்கப்பட்ட சிம் கார்டுகளுக்கு, புதிய அடையாளம் கேட்கபட மாட்டாது எனக் கூறப்பட்டுள்ளது. எனவே 50 கோடி சிம் கார்டுகள் துண்டிக்கப்படும் என வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.