ஞாயிறு, 14 அக்டோபர், 2018

பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டை உருவாக்கி சாதனை படைத்த 76 வயது முதியவர்! October 14, 2018

Image

சீனாவில் 76 வயது முதியவர் ஒருவர் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கி சாதனை படைத்துள்ளார். வறுமையிலும் பணத்திற்காக மரங்களை வெட்டாமல் பராமரிப்பது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

ஓங்கிய மலைக்காடு.... அதன் உச்சியில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் காடுகளின் தந்தை என சீனர்களால் அழைக்கப்படும் Wei Fafu... இவரை ஏன் காடுகளின் தந்தை என்று சீன மக்கள் அழைக்கின்றார்கள் என்பதை அறிய வேண்டுமென்றால், 30 ஆண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டும். 1985ல் பனி போர்த்திய அந்த குளிர்காலத்தில் Wei Fafu படித்த நாளிதழ் ஒன்றில் காடுகளை பாதுகாக்க, மரங்களை வளர்ப்போருக்கு அரசு சன்மானம் வழங்கும் என விளம்பரம் இருந்தது.  மரங்களின் காதலனான Wei Fafu-க்கு அது ஒரு இனிப்பு செய்தியாக மாறியது. தனது நண்பர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு முதல் செடியை Zunyi மலைப்பகுதியில் நடுகிறார். அந்த நிகழ்வுதான் சீனாவின் இயற்கை அழகிற்கு மணி மகுடமாக மாறியது.  

இந்த மரங்களை தன் குழந்தையைப் போல் வளர்த்த Wei Fafu  காலையில் எழுந்ததில் இருந்து தினமும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு ராஜாளியைப் போல் அந்த மலைக் காடுகளில் வலசை வருவதையே தொழிலாகக் கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு...பல நூறு ஹெக்டர் பரப்பளவிலான பசுமைக்கு வித்திட்டுள்ளது. இந்த காடுகளில் மூலை முடுக்கெல்லாம் சுற்றித்திரிந்து வளப்படுத்திய இந்த முதியவரைக் கண்டால், தினமும் மரங்கள்  தன் தலையில் இலையை உதிர்த்து ஆசிர்வதிப்பதாக மெய்சிலிர்க்கக்  கூறுகிறார் Wei Fafu .  

கடந்த 2009ம் ஆண்டு Wei Fafu மனைவிக்கு புற்று நோய் ஏற்பட்டு படுத்த படுக்கையாக நோயின் பிடியில் சிக்கினார். மரங்களை வெட்டி மனைவிக்கு சிசிக்சை அளிக்க சில நண்பர்கள் அறிவுரைக் கூறுகின்றனர். பணத்திற்காக மரங்களை வெட்டுவதில்லை என்று உறுதி பூண்ட அந்த முதியவர் தன் சொந்த செலவிலேயே மனைவிக்கு சிகிச்சை அளித்தார். மனைவி தன்னை விட்டு பிரிந்தாலும் இந்த மரங்கள் இயற்கையையும் சக மனிதனையும் வாழ வைக்கும் என்பது அவரின் எளியக் கோட்பாடு. இவரது பணியையும், நேர்மையும் பாராட்டிய சீன அரசு, 2015ம் ஆண்டு சிறந்த தொழிலாளருக்கான விருதை வழங்கி கௌரவித்தது. பூமியின் பசுமையை சிலர் கொள்ளை அடிக்கும்  போது இந்த முதியவரோ பூமியின் ஆயுளைக் கூட்டி அழகுபடுத்தி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளார்.