வெள்ளி, 12 அக்டோபர், 2018

டிட்லி புயலுக்கு ஆந்திராவில் இதுவரை 8 பேர் பலியானதாக தகவல்; உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என அச்சம்! October 11, 2018

Image

ஆந்திராவில் டிட்லி புயலுக்கு, இதுவரை 8 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக முடியாததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. 

ஒடிஷாவை தாக்கிய டிட்லி, ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளையும் தாக்கியது. இதனால் கடும் மழை பெய்து வரும் நிலையில்,ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்தன. மேலும், பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும், தொலைபேசி சேவையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பல்வேறு தாலுகாக்களில், 26 சென்டி மீட்டர் அளவு வரை மழை பெய்ததாகவும், மாநில பேரிடர் மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து கிடப்பதால், பேருந்து போக்குவரத்தை ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம், ரத்து செய்துள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில், மீட்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆந்திராவில் டிட்லி புயல் தாக்குதலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயலின் தாண்டவத்தால் ஏராளமான இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

இதனிடையே, புயல் தாக்குதலுக்கு முன்பாக கால்நடைகளை பாதுகாப்பு கருதி அதன் உரிமையாளர்கள் மரங்களில் கட்டி வைத்திருந்தனர். துரதிருஷ்டவசமாக அந்த மரங்கள் சாய்ந்ததில் கால்நடைகள் அடியில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. புயலின் தாக்கத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பெருமளவிலான பறவைகளும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரையை கடக்கும், போது காற்றின் வேகம் மணிக்கு 140 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருந்தது என்று கூறப்படும் நிலையில், ஸ்ரீகாகுளம் பகுதியில் கண்டெய்னர் லாரிகளும் புயலின் தாண்டவதால் சாலையில் புரட்டிப் போடப்பட்டன.