செவ்வாய், 9 அக்டோபர், 2018

2019ல் மாயாவதியை பிரதமராக ஆக்குவோம் - முன்னாள் ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா October 8, 2018

Image

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியாவின் அடுத்த பிரதமராக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியான மாயாவதியை ஆக்குவேன் என முன்னாள் ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநில முன்னாள் முதல்வரான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று திகார் சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

இரண்டு வாரங்கள் பரோலில் சிறையில் இருந்து வெளிவந்துள்ள ஓம் பிரகாஷ் சவுதாலா மறைந்த இந்திய தேசிய லோக் ஜனதள கட்சியின் தலைவரும், தனது தந்தையுமான தேவிலாலின் 105வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கோஹன்னா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

2014ஆம் ஆண்டிற்கு பிறகு முதல்முறையாக பொதுக்கூட்டத்தில் பேசிய ஓம் பிரகாஷ் சவுதாலா, அடுத்த ஆண்டில் நடைபெற நாடாளுமன்ற தேர்தலுடன் நடக்கவிருக்கும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் - இந்திய தேசிய லோக் ஜனதள கட்சிகளின் கூட்டணிக்கு அமோக ஆதரவையளித்து தன்னை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியான மாயாவதியை இந்தியாவின் அடுத்த பிரதமராக ஆக்குவேன் எனவும் அவர் கூறினார்.

பின்னர் பேசிய ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகனும் இந்திய தேசிய லோக் ஜனதள கட்சியின் மூத்த தலைவருமான அபே சவுதாலா கூறும்போது தங்கள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றினால் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் மற்றும் மின்சாரக் கட்டணங்களை தள்ளுபடி செய்வோம் எனவும் அதற்கு தங்கள் கூட்டணியை முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் குஜராத் பிரதமரும் ஜன் விகால்ப் மோர்சா கட்சியின் நிறுவனருமான சங்கேர்சிங் வகேலாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என பேச்சு அடிபட்டு வரும் சூழலில் அக்கட்சியின் தோழமைக் கட்சிகளாக விளங்கிய பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அக்கூட்டணியில் இணையப்போவதில்லை என்ற அறிவிப்பு வெளியான பரபரப்பு அடங்குவதற்குள் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக மாற்றுவோம் என  ஓம் பிரகாஷ் சவுதாலா கூறியிருப்பது 2019ல் வலுவான மகாபத்பந்தன் கூட்டணி அமையுமா என்பதை கேள்விக்குறியாக ஆக்கியுள்ளது.