புதன், 10 அக்டோபர், 2018

நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில் காலை முதல் மாலை வரை நடந்தது என்ன? October 9, 2018

Image

தமிழக ஆளுநர் மாளிகை குறித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாக 124 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. நக்கீரன் கைது விவகாரத்தில் காலை முதல் மாலை வரை என்ன நடந்தது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழக ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுத்தார்.. இது தான் நக்கீரன் கோபால் மீது அளிக்கப்பட்ட புகார். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தமிழக ஆளுநர் மாளிகை குறித்து அவதூறு பரப்பியதாக நக்கீரன் இதழ் மற்றும் இணையதளம் மீது புகார் அளித்தது ஆளுநர் மாளிகை. இந்த புகாரை பெற்றுக்கொண்ட தமிழக காவல் துறை, புனே செல்வதற்காக காத்திருந்த நக்கீரன் கோபாலை சென்னை விமானநிலையத்தில் கைது செய்தது

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதும் தமிழக அரசியல்வாதிகள் தமிழக அரசுக்கு எதிராகவும், ஆளுநர் மாளிகைக்கு எதிராகவும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நக்கீரன் கோபாலை நேரில் சந்திக்க சிந்தாதிரிபேட்டை காவல்நிலையம் சென்றார். ஆனால் வைகோவை அனுமதிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதனால் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ, தான் வழக்கறிஞர் என்ன முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி கோரினார். இந்த கோரிக்கையும் நிராகரிக்க பட்டதால் ஆத்திரமடைந்த வைகோ தனது தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து அனுமதியின்றி போராடியதாக வைகோ கைது செய்யப்பட்டார். 

இதனை தொடர்ந்து நக்கீரன் கோபால் மற்றும் வைகோவை நேரில் சந்தித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். தொடர்ந்து தமிழக அரசுக்கு அவர் தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். இதே போன்று ராமதாஸ், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். மறுபுறம் பாஜக தலைவர்களும், அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரனும் நக்கீரன் மீதான நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்தனர். 

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நக்கீரன் கோபால், பின்னர், திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைகள் முடிந்ததும், சுமார் 2 மணிளவில் சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர்கள், கட்டுரை வெளியிட்டதற்காக 124 வது சட்ட பிரிவின் கீழ் கைது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிட்டனர். ஊடக பிரதிநிதியாக நீதிமன்றத்தில் இருந்த என்.ராமும், நக்கீரன் கோபாலை 124வது பிரிவின் கீழ் சிறைக்கு அனுப்பினால் தவறான முன்னுதரணமாகி விடும் என தெரிவித்தார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபால் மீது 124வது சட்ட பிரிவின் கீழ், நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இல்லை என தெரிவித்தார். மேலும் நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து காலையில் கைதான நக்கீரன் கோபால் மாலையில் விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால், கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதிமன்றம் நின்றதால் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கட்டுரை வெளியிட்டதற்காக ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நக்கீரன் கோபால் விவகாரம் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறி போனது என்பதே நிதர்சனம்.