புதன், 24 அக்டோபர், 2018

இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சி தேர்தல்; இழந்தது என்ன? October 24, 2018

Image

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழல்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு முக்கியமானதாகி இருக்கிறது. 

தமிழக உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

கடந்த 2016 அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த திமுக, அது வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திமுகவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.

தேர்தல் அறிவிப்பில் இருக்கும் குறைபாடுகளை களைந்து விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு பல முறை உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டும், இப்போது வரை தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளை நியமிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகள் மூலம் நிர்வகிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், உள்ளாட்சி அமைப்புகளை அதிகாரிகள் தான் நிர்வகித்து வந்தனர். அதே போன்றதொரு நிலைமை இப்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. 

உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகத்தின் ஆணிவேராக கருதப்படுபவை. சாமானிய மக்களும் அதிகாரத்தை நோக்கி முன்னேறுவதற்கான தளமாக உள்ளாட்சி அமைப்புகள் பார்க்கப்படுகின்றன. தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன. இந்த நோய்களுக்கான முக்கியமான காரணம் சுகாதார சீர்கேடுகள். அதனை சரி செய்ய வேண்டிய கடமை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உண்டு. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள் இல்லாததால் அந்தப் பணிகளில் சுணக்கம் நிலவுகிறது. 

தமிழக அரசு என்னதான் அதிகாரிகளை நியமித்தாலும், அவர்களால் மக்கள் பிரதிநிதிகள் அளவுக்கு பணியாற்ற முடியாது என்பதால் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்