செவ்வாய், 30 அக்டோபர், 2018

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கும் பணிக்காக மரங்களை வெட்டக் கூடாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை! October 30, 2018

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக, சாலையோர மரங்களை வெட்டக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை-நத்தம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் உள்ள மரங்களை வெட்டி, விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள முயற்சிப்பதாக மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்த தமிழரசன் என்பவர் பொதுநல மனுவை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.

அதில், மரங்களை வெட்ட இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும், மரங்களை வெட்டாமல் மாற்று இடங்களில் வைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

அதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மறு உத்தரவு வரும் வரை சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்டக்கூடாது என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கும் ஒத்திவைத்தனர்.

source:
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/30/10/2018/trees-should-not-be-cut-national-highway-expansion-work-high-court