சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு வாரத்தில் விசாரணையை முடிக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் வெடித்தது. இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இருவரையும் பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது. புதிய சிபிஐ இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் கட்டாய விடுப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஏ.எம்.ஜோசப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அலோக் வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரிமன், அலோக் வர்மாவின் பதவி காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் மத்திய அமைச்சகத்தின் உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது என்று வாதிட்டார். சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மீதான விசாரணையை 2 வாரங்களில் முடிக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் விசாரணை நடத்தலாம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நவம்பர் 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. அதுவரை தற்காலிக சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை நவம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.