ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசுடன் அவர் மோதல் போக்கை கடைபிடிப்பதாக செய்தி வந்த நிலையில் இந்த அதிரடி முடிவை அவர் மேற்கொண்டுள்ளார்.
ரகுராம் ராஜனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக பதவி வகித்து வந்த உர்ஜித் படேல், செப்டம்பர் 19, 2016ல் 24வது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி ஏற்றார்.
இந்நிலையில் 2019ம் ஆண்டுடன் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் திடீரென உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வந்ததாக தகவல் வெளியான நிலையில், உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்.
எனினும், இதுபற்றி விளக்கம் அளிக்காத உர்ஜித் படேல், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியில் துணை ஆளுநராக இருந்து ஆளுநராக பதவியேற்றவர் என்ற பெருமையை உர்ஜித் படேல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு பேரிழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், துணை ஆளுநராகவும் உர்ஜித் படேல் 6 ஆண்டுகள் தனித்தன்மையுடன் சேவையாற்றி அதன் உறுதித்தன்மையை ஏற்படுத்தியவர் என புகழாரம் சூட்டியுள்ளார். இதேபோல் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தன் ட்விட்டரில், உர்ஜித் படேலின் ராஜினாமாவை கவலையுடன் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியை காக்கவே அதன் ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் பேசிய அவர், மத்திய அரசின் செயல்பாட்டை கண்டிக்கும் வகையில் இதுபோன்று உயர் பதவியில் இருப்போர் பதவி விலகுவது வரவேற்புக்குரியது என தெரிவித்துள்ளார்.
இதேபோல் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி, உர்ஜித் படேலின் ராஜினாமா முடிவால் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக குடியரசுத்தலைவரை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
soruce: ns7.tv