2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தவும், அக்கட்சிக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது குறித்தும்,டெல்லியில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில், முதன்முறையாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்க வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, கர்நாடகா முதல்வருமான குமாரசாமி, காஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். எனினும், பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் எனத் தெரிகிறது. இந்தக்கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக வலுவான மெகா கூட்டணியை உருவாக்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
காங்கிரஸ் - திமுக கூட்டணி எப்போதும் நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கில் செயல்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவ சிலையை வரும் 16ம் தேதி காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். இந்நிலையில், டெல்லி சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து, விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். அப்போது, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி, கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர். மு.க.ஸ்டாலின் உடனாக சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, திமுக உடனான கூட்டணி காலத்தை வென்றது, பலமானது'' என்று கூறியுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் - திமுக கூட்டணி எப்போதும் மக்களுக்காக செயலாற்றும் என மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
source: NS7.tv