செவ்வாய், 30 ஏப்ரல், 2019

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! April 30, 2019

Image
மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நிகழ்ந்த தொடர்குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
மேலும், மதுரை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் பாஸ்கரன் எனும் இருவர் கடிதம் மூலம் மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்திருந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் சந்திரசேகரன் மற்றும் பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மீதும் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்காமல் தடுப்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது

source ns7.tv

15,600 ஆண்டுகள் பழமையான மனிதரின் காலடித்தடம் கண்டுபிடிப்பு! April 29, 2019

Image
சிலி நாட்டின்  தெற்கு பகுதியில் கண்டறியப்பட்ட மனிதரின் காலடித்தடம் 15,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டின் தென்பகுதியில் உள்ள Osornoவில் மனிதரின் கால்தடம் ஒன்றை கடந்த 2010ம் ஆண்டில் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கண்டறிந்தார்.
இது ஏதேனும் மிருகத்தின் கால்தடமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில் இது தொடர்பான ஆராய்ச்சியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 9 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆராய்ச்சியினை தலைமையேற்று நடத்திய Karen Moreno என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இது மனிதரின் கால்தடம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இது 15,600 ஆண்டுகள் பழமையானது என அவர் உறுதியாக கூறியுள்ளார்.
கால்தடம் கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து யானைகள் உள்ளிட்ட காட்டு மிருகங்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறிய Karen Moreno, இது மனிதர்களின் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் அமெரிக்காவில் 12,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் இருந்ததற்கான முதல் ஆதாரமாக இது அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தென் அமெரிக்காவில் ஆதி மனிதர்களின் இருப்பை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கக்கூடிய பகுதிகளை தற்போது ஆராந்து வருவதாகவும் Moreno கூறினார்.


அதி தீவிர புயலாக வலுபெற்றுள்ளது ஃபானி: சென்னை வானிலை மையம் April 30, 2019

Image
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், இது ஒடிசாவை நோக்கி செல்லக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஃபானி புயல் சென்னையிலிருந்து 575 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகக் கூறினார். இந்த புயல், வடமேற்கு திசையில் பயணித்து நாளை மாலை ஒடிசா கடற்கரையை நெருங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
இந்த புயலால் வடதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்த பாலச்சந்திரன், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் வங்கக் கடலின் தென் மேற்குப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். 
இந்நிலையில், ஃபானி புயலால் நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்புள்ள தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆயிரத்து 86 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source ns7.tv

தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை மழை...! பொதுமக்கள் உற்சாகம்! April 30, 2019

Image
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நேற்று கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. 
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஆங்காங்கே தலைகாட்டும் மழையால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜாபுரம், மல்லி, கிருஷ்ணன்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், ஒரு சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாயினர்.
இதேபோன்று  ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, பவானி, கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

ராணுவத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியல் வெளியீடு! April 29, 2019

Image
உலகில் ராணுவத்துக்கு அதிகமாக நிதி ஒதுக்கும் நாடுகளில் இந்தியா 4வது இடம் பெற்றுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டில் உலக நாடுகள் தங்கள் ராணுவத்துக்கு செலவிட்ட தொகைகளின் அடிப்படையிலான பட்டியலை, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா 649 பில்லியன் டாலர் தொகையை ராணுவத்துக்காக ஒதுக்கி உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடம் பிடித்துள்ள சீனா, கடந்த ஆண்டு தனது ராணுவத்துக்கு 250 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது.
மூன்றாம் இடம் பிடித்துள்ள சவூதி அரேபியா 67.6 பில்லியன் டாலர் நிதியை ராணுவத்துக்காக ஒதுக்கியுள்ளது. 4ம் இடம் பிடித்துள்ள இந்தியா 66.5 பில்லியன் டாலர் தொகையை ராணுவத்துக்காக செலவிட்டுள்ளது. 
5ம் இடம் பிடித்துள்ள பிரான்ஸ், சென்ற ஆண்டு தனது ராணுவத்துக்கு 63.8 பில்லியன் டாலர் தொகையை செலவிட்டுள்ளது. இந்த 5 நாடுகள் மட்டுமே சர்வதேச அளவில் ராணுவத்துக்காக ஒதுக்கப்படும் நிதியில் 60 சதவீதத்தைக் கொண்டிருப்பதாக ஸ்பெயின் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தனது ராணுவத்துக்கு 11.40 பில்லியன் டாலர் தொகையை செலவிட்டுள்ள பாகிஸ்தான், உலக அளவில் 19வது இடத்தை பிடித்துள்ளது

source ns7.tv

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்! April 29, 2019

Image
எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவை குறை கூறி வீடியோ வெளியிட்ட தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாதி , பகுஜன் சமாஜ் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.  
எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ், 2017ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். 
வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி, கடந்த 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் சமாஜ்வாதி சார்பில் வாரணாசி தொகுதியில் அறிவிக்கப்பட்ட ஷாலினி யாதவ் என்ற வேட்பாளர் திடீரென நீக்கப்பட்டு, தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது.

source ns7.tv

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்... மத்திய அரசு நிதி ஒதுக்கீடு! April 30, 2019

Image
ஃபானி புயலால் நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்புள்ள தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு 1086 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. 
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் கூடிய தேசிய நெருக்கடி மேலாண்மை குழு, ஃபானி புயலால் பாதிப்புகளை சந்திக்க வாய்ப்புள்ள மாநிலங்களுக்கு முன்கூட்டியே நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. 
இதனையடுத்து, தமிழகத்திற்கு 309.37 கோடி ரூபாயும், ஆந்திராவிற்கு 200 கோடி ரூபாயும், ஒடிசாவுக்கு 340 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்திற்கு 235 கோடி ரூபாயும் மத்தய அரசு நிதி உதவி அளித்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில், இந்த நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. 

source ns7.tv

பனிமனிதனின் கால்தடத்தின் புகைப்படம் வெளியீடு! April 30, 2019

Image
இமயமலையில் பனிமனிதனின் கால்தடத்தின் புகைப்படத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. 
இதுதொடர்பாக இந்திய ராணுவம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கலு ராணுவ முகாம் அருகே இந்த கால் தடம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்தடம் 32 அங்குலம் கொண்ட பிரம்மாண்ட அளவில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஒற்றை கால்தடம் மட்டுமே இருந்நதாக குறிப்பிடப்படுள்ளது. 
எட்டி என்று அழைக்கப்படும் பனிமனிதன் பற்றிய நம்பிக்கை உலகம் முழுவதும் இருந்து வரும் நிலையில், இது எட்டி மனிதனின் கால்தடமா என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டுவருகிறது. ஏற்கனவே, கடந்த 1951ம் ஆண்டு, பிரிட்டன் நாட்டை சேர்ந்த பயணாளி ஒருவர், எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்றபோது எட்டியின் கால்தடத்தை பார்த்ததாக கூறப்படுகிறது. பனிமனிதனான எட்டி பற்றி பல திரைப்படங்கள், ஆவணப்படங்கள், வீடியோ கேம்ஸ் போன்றவை தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாமல், கடந்த 2016ம் ஆண்டு, "Hunt for the Yeti” என்ற தலைப்பில் 4 எபிஸோடுகள் கொண்ட வெப் சீரீஸ் தயாரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

source ns7.tv

திங்கள், 29 ஏப்ரல், 2019

இலங்கையை போல் தமிழகத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும்...’ வீடியோ வெளியிட்ட நபர்! April 29, 2019

Image
இலங்கையை போல் தமிழகத்திலும் 3 மாதங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை தலைநகர் கொழும்பில், இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக, தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில், கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அச்ச உணர்வுடன் தான் வெளியில் செல்வதாக, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் கூட, பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை தொலைபேசியில் பேசிய நபர், தம்மை மதுரையை சேர்ந்த சி.எம்.சாமி என அறிமுகப்படுத்திக் கொண்டார். தமிழகத்தில் 3 மாதங்களில் மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என கூறிய அவர், இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்துதான் தீவிரவாதிகள் சென்றதாகவும் கூறினார். 
இதற்கு மதுரையின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் உடந்தையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து மதுரை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சமூக வலைதளத்தில் சி.எம்.சாமி என்பவர் வீடியோவை வெளியிட்டது தெரியவந்தது. 

source ns7.tv

அதிதீவிர புயலாக மாறவுள்ள ஃபானி புயல்...! April 29, 2019

Image
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் அதிதீவிர புயலாக மாறவுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.   
வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 890 கிலோ மீட்டர் தொலைவில், ஃபானி புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறும், என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில், வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. ஏப்ரல் 30 மற்றும் மே ஒன்றாம் தேதிகளில், வட தமிழகம் - தென் ஆந்திர கடற்கரைக்கு 300 கிலோ மீட்டர் அருகில், கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
வட தமிழகத்தை நெருங்கும் வேளையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறிய வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. புயல் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தால், தமிழகத்தில் வெப்பநிலை உயரும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
source ns7.tv

மக்களவைத் தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்! April 29, 2019

ns7.tv
Image
நான்காம் கட்ட மக்களவை தேர்தலையொட்டி, மகாராஷ்டிரா உள்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில், இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு உட்பட்ட 72 தொகுதிகளுக்கு, இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. நான்காம் கட்டத் தேர்தலில், 12 கோடியே 79 லட்சம் பேர், வாக்களிக்க உள்ளனர். 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் 17 தொகுதிகளுக்கும், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகளிலும், பீகாரில் ஐந்து தொகுதிகளிலும், ஜார்க்கண்டில் மூன்று தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில், இவற்றில் 45 தொகுதிகளை பாஜக கைப்பற்றி இருந்தது. மும்பை தொகுதியில் நடிகை ஊர்மிளா மும்பை வடமத்தியில் பூனம் மகாஜன், உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் தொகுதியில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகனும் காங்கிரஸ் வேட்பாளருமான வைபவ் ஜோத்பூரிலும், மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் நடிகை மூன்மூன்சென் ஆகியோரும் களத்தில் உள்ளனர். இதுதவிர ஒடிசாவில் உள்ள 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே கடும் மோதல்! April 29, 2019

Image
நாடாளுமன்ற மக்களவைக்கு இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதியில் மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டது. 
அன்சோல் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி அருகே, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தொண்டர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். அங்கு பாதுகாப்பு படையினர், போலீசார் இருந்தும், அவர்கள் முன்னிலையிலே மோதல் நடைபெற்றது. அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் பல முறை எச்சரித்தும் அவர்கள் செல்லவில்லை. மாறாக பெண்கள் உட்பட பலரும், நீளமான உருட்டுக் கடைகளுடன் ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த போலீசாரும், தேர்தல் சிறப்பு பாதுகாப்புப் படையினரும், தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதனால், பாதுகாப்புப் படையினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் மூளும் சூழல் உருவானது. 
வன்முறை சம்பவம் நடந்த அசன்சோல் வாக்குச் சாவடியை, மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களே காரணம் என குற்றம்சாட்டினார். வாக்காளர்களை,  திரிணாமுல் தொண்டர்கள் வாக்களிக்க விடாமல் தடுப்பதாகவும் அவர் குறைகூறினார்.

source ns7.tv

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! April 29, 2019

Image
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. 
கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் ஒன்பது லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததை அடுத்து, தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை இணையதளங்களில் சென்று தங்களது பதிவு எண், மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை தேர்வர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும் என்றும், பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே இரண்டாம் தேதி பிற்பகல் முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் வழங்கப்படும் என்றும், மே 2 முதல் நான்காம் தேதி வரை மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வில் வெற்றி பெறாத, பங்கேற்காத மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு ஜூன் 14-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

source ns7.tv

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"ஃபானி புயல், தமிழகத்தை தாக்கும் வாய்ப்புகள் குறைவு" : சென்னை வானிலை ஆய்வு மையம் April 28, 2019

Image
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல், தமிழகத்தை தாக்கும் வாய்ப்புகள் குறைவு என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
ஃபானி புயல் தற்போது இலங்கையின் திருகோணமலையில் இருந்து 850 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தை புயல் தாக்கும் வாய்ப்புகள் குறைவு என்றும், வடதமிழகத்தில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஃபானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாரம்பரிய படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாகை மற்றும் காரைக்கால் துறைமுகத்திலும் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, கோடியக்கரை, வேதாரண்யம், தரங்கம்பாடி, பழையார் உள்ளிட்ட கடற்பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளதால், மீனவர்களின் படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 
source ns7.tv

நெருங்கி வரும் புயல்....முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் தமிழக அரசு! April 27, 2019

Image
வங்கக் கடலில் உருவான புயல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைளைத் தீவிரப்படுத்தியுள்ளது. 
இதன் காரணமாக, கடலோர பகுதிகள் மட்டுமல்லாமல், அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பேசிய பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாட்களில் அரசு அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்றும் சத்யகோபால் தெரிவித்தார். 
புயல் குறித்து, தஞ்சாவூரில் உள்ள 36 கடலோர மீனவக் கிராமங்களுக்கு கடலோர காவல்படையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 900 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப் படகுகள் ஏற்கனவே கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
source ns7.tv

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை! April 27, 2019

source ns7.tv
Image
புயல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வரும் 29, 30ம் தேதிகளில் செல்ல  தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுற்றுலா தலங்களான பேரிஜம் ஏரி, மோயர் பாயின்ட், குணா குகை, பில்லர் ராக், ஃபைன் மர காடுகள் உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது. இந்த நிலையில் புயல் ஏற்படும் நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இருக்க மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி அறிவுறுத்தலின்படி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரும் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதகையில் மே 1-ந்தேதி கோடை விழா தொடங்கும் என்றும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சிகள் ரத்து செய்யபடுவதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உருவானது ஃபானி புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! April 27, 2019

Image
வங்கக் கடலில் ஃபானி புயல் உருவாகியுள்ளதையடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
புயல் எச்சரிக்கையை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்தனர். ஏற்கெனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து முட்டம், குளச்சல், கடியப்பட்டினம், தேங்காய்பட்டினம், கன்னியாகுமரி மீனவர்கள் மூன்றாவது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 
ஃபானி புயல் முன்னெச்சரிக்கையையொட்டி கடலூர் மாவட்டம் மரக்காணம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. வங்கக் கடலில் தற்போது ஃபானி புயல் உருவாகி உள்ளது. இதையடுத்து, மீனவர்கள் யாரும் கட்டு மரம், பைபர் படகு போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் மரக்காணம் பகுதி மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
source ns7.tv

பேரவைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் எச்சரிக்கை! April 26, 2019


Image
பேரவைத் தலைவர் நடுநிலைமை தவறி மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது  நடவடிக்கை எடுத்தால்,  பேரவைத் தலைவர் மீது திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகியோரை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து, 3 எம்எல்ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால், 3 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை 
வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்  மே 23ஆம் தேதி 22 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், சட்ட அமைச்சர் சி.வி சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் இன்று பேரவைத் தலைவரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது என்றும் அந்த வழக்கை முடிந்த வரை காலதாமதம் செய்து, 18 மாதங்களுக்கு மேல் தேர்தலே நடத்தாமல் அ.தி.மு.க. ஆட்சி தொடர மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள ஆளுநரும் சட்டவிரோதமாக அனுமதித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அதன் பலன் பா.ஜ.க.விற்கு அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணியாக மாறியது. ஆனால் தமிழக மக்கள் ஒரு மோசமான அரசின் நிர்வாக  சீரழிவுகளை தினம் தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

17ஆவது மக்களவைத் தேர்தலுடன் முதலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 
தேர்தல் முடிவுற்று, பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டதால் வருகின்ற மே 19-ஆம் 
தேதி மீதியுள்ள நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் என்பதை தெரிந்து கொண்டதால் - சட்ட அமைச்சரும், அரசு கொறடாவும் தங்களது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து பேரவைத் தலைவரை சந்தித்து இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, 22 தொகுதிகளிலும் தோல்வி அடையும் அதிமுக அரசுக்கு இருக்கின்ற மைனாரிட்டி அந்தஸ்தும் பறிபோய், ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பீதியில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், இந்த நிகழ்வு மக்களைவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துச் சொல்ல துணை முதலமைச்சரும் - அமைச்சர்களும் வாரணாசி சென்று சந்தித்த தினத்தில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு ஊழல் ஆட்சியை- மக்கள் விரோத ஆட்சியை எப்படியாவது தக்க வைத்து விட வேண்டும் என்பதில் அதிமுகவை விட பிரதமர் நரேந்திரமோடியும், மாநிலத்தில் இருக்கும் ஆளுநரும் தொடர்ந்து செயல்படுவது “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்பதை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், சட்டமன்றத்தின் பேரவைத் தலைவரைப் பொறுத்தவரை கட்சி சார்பற்றவர்; அந்த பதவிக்கு வந்த பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவராக இருப்பவர் ஆவார். “ பாரபட்சமற்ற முறையில் பேரவைத் தலைவரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது” என்று பல்வேறு தீர்ப்புகள் வாயிலாக உச்சநீதிமன்றம் பேரவைத் தலைவர்களை எச்சரித்துள்ளது என்பதை மேற்கோள்காட்டியுள்ளார்.

கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று  கொடுக்கப்பட்டுள்ள மனு மீது பேரவைத் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின் ஓ. பன்னீர் செல்வமும் அவரோடு சேர்ந்து முதலமைச்சருடன் ஐக்கியமான சட்டமன்ற  உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்து விட்டு பதவியில் தொடருவதை அனுமதித்திருக்கும் பேரவைத் தலைவர் இதில் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு “கொல்லைப்புற வழியாக” மெஜாரிட்டி தேடித்தர முயலக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, பேரவைத் தலைவர் அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுத்தால், பேரவைத் தலைவர்மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

source ns7.tv

அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ள குரங்கணி பகுதி மலைவாழ் மக்கள்! April 27, 2019


Image
அடிப்படை வசதிகளை செய்து தரும் வரை, அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்கப் போவதாக தேனி மாவட்டம் குரங்கணி பகுதி முதுவாக்குடி மலைவாழ் மக்கள் அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குரங்கணியின் மேல்பகுதியில் உள்ளது முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் மலை கிராமங்கள். கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்திருக்கக்கூடிய இந்த மலை கிராமங்கள், தமிழக - கேரள எல்லையாக உள்ளன. 
ஆங்கிலேயர் காலம் முதல், இப்பகுதி மக்கள் தேயிலை, காப்பி, மிளகு போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். இந்த மூன்று கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வனத்துறையினர் அனுமதி அளிக்காததால், நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளாகியும் இந்த மலைவாழ் மக்களுக்கு இன்னும் சாலை வசதி கிடைக்கவில்லை. இதனால், உடல் நலம் சரியில்லாதவர்களை தூளி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் அவலம் நிலவி வருகிறது. 
இப்பகுதியில் விளையும் ஏலக்காய், மிளகு, காபி மற்றும் தேயிலை போன்றவற்றை கோவேரி கழுதைகளில் ஏற்றியும், ஆட்கள் மூலமாக போடி சந்தைக்கு தலைசுச்சுமையாக சுமந்து வருகின்றனர். இதனால் அதிகளவில் பணம் செலவிடப்பட வேண்டியதிருப்பதாக இக்கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றச்சாட்டுகின்றனர். தொடர்ந்து தங்களை புறக்கணித்து வரும் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தேர்தலையும் இந்த மலைவாழ் மக்கள் புறக்கணித்தனர்.
இதனையடுத்து, உரிய விசாரணைக்கு தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். கோட்டாட்சியர் வைத்தியநாதன் அப்பகுதி மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். இப்பகுதி மக்களின் கோரிக்கை தொடர்பாக வனத்துறையிடம் கலந்தாலோசனை மேற்கொண்ட அவர், விரைவில் சாலை வசதி அமைத்துத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

source ns7.tv

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ! April 28, 2019

Image
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. 
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உட்பட 7 பேர் மீது, 5 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது. 
பாலியல் வன்முறை மற்றும் நகைப் பறிப்பு தொடர்பாக இரு வழக்குகளை அவர்கள் மீது சிபிஐ பதிவு செய்துள்ளது.
source ns7.tv

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு! April 26, 2019

ns7.tv
Image
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பின்னர் புயலாக மாறி இலங்கை கடற்கரைக்கும் வட தமிழகத்திற்கும் இடையே நகரும் என வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிக்கு இடையே வரும் 30ம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே தயார் நிலையில் இருக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் 30 மற்றும் 1-ம் தேதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புகுழுவினர் தேவையான உபகரணங்களுடன் தயாராக இருக்குமாறும் அவர் ஆணையிட்டுள்ளார். 
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர். வழக்கத்தை விட கடல் சற்று சீற்றமாக இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 
இதேபோல் வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். மீன்பிடி தடை காலம் என்பதால் விசை படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. குறைந்த தூரம் சென்று மீன்பிடித்து வந்த பைபர் படகுகளும் புயல் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை. 
 
ஃபனி புயல் அதி தீவிர புயலாக கரையை நெருங்கி வருவதால், நாகை, புதுச்சேரி காரைக்கால் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு? April 26, 2019

Image
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 29-ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் ஒன்பது லட்சத்து, 97 ஆயிரம் பேர் எழுதியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த 16ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் தாங்கள் பதிவு செய்த செல்போன் எண் மூலம் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தியாக பெறலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9.97 லட்சம் மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 29-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19-ல் வெளியானது. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த ஆண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9.97 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். 
 
 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் கடந்த 1-ம் தேதி தொடங்கி 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. மாணவர்கள் மதிப்பெண்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 29-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.மாணவர்கள் தாங்கள் பதிவு செய்த செல்போன் எண் மூலம் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தியாக பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

source ns7.tv

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் புயல்! April 26, 2019

Image
50 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நோக்கி புயல் வர உள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக உருவெடுக்கும் என்பதால், தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நோக்கி புயல் வர உள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், பொதுவாக ஏப்ரல் மாத இறுதியில் உருவாகும் புயல் பர்மாவையே தாக்கியிருக்கிறது என்றும், முன்னதாக கடந்த 1966ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் உருவான புயல் மட்டுமே தமிழகத்தை தாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் ஏப்ரல் இறுதியில் உருவாகும் புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்னும் 24 மணி நேரத்திற்குப் பிறகே எந்தெந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கணிக்க முடியும் எனவும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

source ns7.tv

நெருங்கும் ஃபானி: புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! April 26, 2019

ns7.tv
Image
ஃபானி புயல் எதிரொலியாக புதுச்சேரியில் விடுப்பு எடுத்த அரசு அதிகாரிகள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். 
வங்க கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஃபானி புயலாக மாறி வரும் 30ம் தேதி புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், புயலை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, புயலை எதிர்கொள்வதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புயல் தாக்குமானால், அதன் பிறகு மேற்கொள்ள வேண்டிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறினார்.
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து விடுப்பு எடுத்த அனைத்து அரசு துறை அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன், அனைத்து துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.

மரத்தின் உச்சியில் விமானத்தை தரையிறக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த விமானி! April 26, 2019

Image
விமானத்தின் எஞ்சின் பழுதடைந்த நிலையில் உயரமான மரத்தின் மீது மோதச்செய்து விமானி ஒருவர் உயிர்பிழைத்த அதிசயம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள Mccall எனும் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கிரிகோரி (வயது 79). இவர் கடந்த திங்கட்கிழமை இரவில் தன்னுடைய  Piper Cub PA-18 என்ற ஒற்றை இஞ்சின் கொண்ட சிறிய ரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது விமானத்தின் எஞ்சின் திடீரென்று செயலிழந்தது.
அவரது விமானம் உயரமான மரங்கள் மிகுந்த பகுதியில் கீழே விழுந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அவரது விமானம் 60 அடி உயர மரத்தின் உச்சிப்பகுதியில் சிக்கிக்கொண்டது.
சுதாரித்துக்கொண்ட விமானி ஜான் கிரிகோரி, 911 என்ற அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனது நிலையை எடுத்துரைத்துள்ளார். அதன் பேரில் தீயணைப்புத்துறை வீரர்கள் அங்கு வந்தனர்.
உயரமான மரத்தில் விமானத்தில் சிக்கிக்கொண்ட விமானியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு கீழே கொண்டுவந்தனர். இருப்பினும் அவரது விமானம் மரத்தின் கிளையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு உள்ளது. அதனை எவ்வாறு மீட்பது என்று அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
source ns7.tv

எந்த சம்பந்தமும் இல்லை



source F B தவ்ஹீத் ஜமாஅத் April 23 at 7:06 PM · இலங்கை குண்டு வெடிப்பில் சந்தேகிக்கப்படும் NTJ விற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை பத்திரிக்கையாளர் சந்திப்பு - சென்னை - 23-04-2019 ஏ.கே. அப்துல் ரஹீம் (மாநிலத் துணைப் பொதுச்செயலாளர், TNTJ)

வியாழன், 25 ஏப்ரல், 2019

தூத்துக்குடியில் வணிகர் சங்கங்களின் சுதேசி பொருளாதார பிரகடன மாநாடு! April 25, 2019

அரசியல் வாதிகளின்  பணப்பட்டுவாடா தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள் வியாபாரிகளை கொடுமைப்படுத்துவதாகவும் இந்தப் போக்கை தேர்தல் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வியாபாரிகளிடம் திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் வரும் மே 5ம் தேதி தூத்துக்குடியில் வணிகர் சங்கங்களின் 36 மாநில மாநாடு சுதேசி பொருளாதார பிரகடன மாநாடாக நடைபெற உள்ளதாகவும் இதில் திரளான வணிகர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார் 
 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் 
செய்தியாளர்களிடம் பேசுகையில் வரும் மே 5ம் தேதி தூத்துக்குடியில் வணிகர் சங்கங்களின் 36 மாநில  மாநாடு சுதேசி பொருளாதார பிரகடன மாநாடாக நடைபெற உள்ளதாகவும் இதில் திரளான வணிகர்கள் 
தங்கள் கடைகளை  மூடி பங்கேற்க உள்ளார்கள்.

அரசியல் வாதிகளின்  பணப்பட்டுவாடா தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள் வியாபாரிகளை கொடுமைப்படுத்துவதாகவும் இந்தப் போக்கை தேர்தல் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வியாபாரிகளிடம் திரும்ப கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாகவும் தேர்தலில் யார் வெற்றி பெற்று வந்தாலும் தங்களின் உரிமைகளை காப்பாற்ற மாட்டார்கள் என்றும் உரிமைகளை காட்டிக் கொடுப்பார்கள் சில்லரை வணிகம் உள்நாட்டின் வர்த்தகம் விவசாயத்தை அழிப்பது தான் இவர்களின் வேலை என்றும் நமது உணர்வுகளை மதிக்க மாட்டார்கள் என்றும் நமது உரிமைகளை அந்நியர்களிடம் காட்டிக் கொடுப்பார்கள் என்றும் சுதேசி பொருளாதாரம் மட்டுமே வலுவான ஆயுதம் என்றும் நம் நாட்டுப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று மக்களும் வியாபாரிகளும் முன்வந்தால் எத்தனை தலைவர்கள் வந்தாலும் எந்த திட்டம் போட்டாலும் அது முறியடிக்கப்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் தானாகவே  வெளிநாட்டுக்கு ஓடிவிடும் அதற்கு நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அவர்  தெரிவித்தார்.

source ns7.tv

நெல் கொள்முதல் செய்யாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்! April 25, 2019

Image
பொள்ளாச்சி அருகே, நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், சுமார் 1500 டன் நெல் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 
கோவை மாவட்டம் ஆனைமலையில், தேர்தல் முடிந்த நிலையில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 23ம் தேதி முதல் நெல்லை கொள்முதல் செய்ய ஆட்சியர் ராசாமணி  உத்தரவிட்டிருந்தார். இதனால், விவசாயிகள் பலரும் ஆனைமலைக்கு நெல் கொண்டு வந்து கொட்டிய நிலையில், அவற்றை கொள்முதல் செய்ய அதிகாரிகள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், நெல் குவியல் மழையில் நனைந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள விவசாயிகள், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்
source ns7.tv

சமூக வலைதள பிரச்சனை சாலைமறியலில் வந்து நின்றது ! April 25, 2019

Image
ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்கள் குறித்து இழிவாக பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்களை கைது செய்யக் கோரி நீடாமங்கலத்தில் சாலைமறியல் நடைபெற்றது. 
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கிராமத்தில் ஒரு சமுதாயத்தின் பெண்கள் குறித்து இழிவாக பேசி சமூகவலைதளத்தில் சிலர் பதிவிட்டனர். இதனால் அங்கு பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதனிடையே தவறாக பதிவிட்டவர்களை கைது செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட நீடாமங்கலத்தில் ஒரு சமூதாயத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதனால், அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

source ns7.tv

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் குளறுபடி; மாணவர்கள் குழப்பம்! April 25, 2019

Image
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்காக கொடுக்கப்பட்ட ஹால் டிக்கெட்களில் தேர்வு நடைபெறும் ஊர் வேறாகவும், தேர்வு மையம் வேறாகவும் இருப்பதாக பல மாணவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இதனிடையே, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ப்ரியதர்ஷனி என்ற மாணவி நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தபோது தேர்வு எழுதும் மைய எண் மதுரை 4 ஆயிரத்து 106 எனவும் தேர்வு எழுதும் இடம் திருநெல்வேலி உள்ள அரசுப்பள்ளி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியும் பெற்றோரும் இந்த குளறுபடிகளை யாரிடம் தெரிவிப்பது என குழப்பதில் ஆழ்ந்துள்ளனர்
இந்நிலையில் ஹால்டிக்கெட் குளறுபடிகள் குறித்து மதுரை மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். நீட் ஹால் டிக்கெட்டில் ஏதேனும் குழப்பம் இருந்தாலோ விவரங்கள் சரியாக இல்லாமல் இருந்தாலோ அத்தகைய ஹால் டிக்கெட்டுகளை பெற்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்  அறிவுறுத்தியுள்ளார்
source ns7.tv