ns7.tv
2019ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர வரும் மே 2ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்னப்பிக்கலாம் எனவும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 3ம் தேதி முதல் நடைபெறும் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, 2017-ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக நடத்தி வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கான பொறியியல் கலந்தாய்வை ஆன்லைன் முறையில் அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. இதற்கிடையே பொறியியல் மாணவர் சேர்க்கை மைய தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விலகினார். இதனால், கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் என்று உயர்கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 2-ம் தேதி தொடங்குகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு மே 2 முதல் மே 31 வரை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
➤ ஜூன் 3-ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்படும்.
➤ ஜூன் 6 முதல் ஜூன் 11 வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.
➤ ஜூன் 17-ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்.
➤ ஜூன் 20-ம் தேதி சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
➤ ஜூன் 20-ல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும்,
➤ ஜூன் 21-ல் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும்,
➤ ஜூன் 22-ல் விளையாட்டுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறும்.
➤ ஜூலை 3 முதல் ஜூலை 30 வரை ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.
வழக்கமான கலந்தாய்வு ஆன்லைன் வழியாகவும், துணைக் கலந்தாய்வு நேரிலும் நடைபெறும். கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் கலந்தாய்வு செயல்பாடுகள் முழுவதுமாகவே ஆன்லைனில் நடைபெறுகிறது. முதல் முறையாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கலந்தாய்வை நடத்துகிறது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 42 சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்தல், சான்றிதழ் சரிபார்த்தல், கலந்தாய்வு உள்ளிட்ட பணிகளை மாணவ மாணவிகள் மேற்கொள்ள முடியும். தவிர, வீட்டிலேயே இணைய வசதி உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் விண்ணப்ப கட்டணம், கலந்தாய்வு கட்டணம் இருக்கும் என்றும் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்றும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.