source ns7.tv
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்பகுதியில், கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில், 290 பேர் பலியாகினர். இந்நிலையில், ராமேஸ்வரத்திற்கு மிக அருகில் இலங்கை இருப்பதால், கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக, உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் கச்சத் தீவையொட்டிய இந்திய கடல் பகுதியில், கடலோர காவல்படையினர், அதிவேக ரோந்து கப்பல்களில், கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஹோவர்கிராப்ட், 2 சிறிய ரக கப்பல்கள், கடற்படையின் சேட்டக் ஹெலிகாப்டர் ஆகியவையும் ரோந்துப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புதுரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில், கடும் சோதனைக்குப் பிறகே, பொதுமக்கள் தனுஷ்கோடிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் தென்பட்டால், தகவல் அளிக்குமாறு பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேபோல இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக, வேளாங்கண்ணி தேவாலயத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு வருவோர், முழு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.