
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிகளுக்காக மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற் கொள்ளாததால் தீ விபத்து ஏற்படுகிறது என்றும் எனவே ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கு நீதிபதிகள் ரோகின்டன் ஃபாலி நரிமன், வினீத் சரண் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது, இங்கு இடைக்கால நிவாரணம் கோரி மனு தாக்கல் செய்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆலை உள்ளே ரசாயன திரவங்கள் உள்ளதால் பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் இருந்தால் விபத்து ஏற்படும் என்றார். ஆனால் இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், எனவே அபராதம் விதிக்க வேண்டாம் எனவும் ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற நீதிபதிகள், இதுபோன்று மனுக்களை தாக்கல் செய்தால் கடுமையான அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.