சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் புதிய பெயரில் சென்னை என்ற வார்த்தை இடம் பெறாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டவேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சகமும் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெயர் மாற்றத்தை தொடர்ந்து ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டன. மேலும் ரயில்களில் பொருத்தப்பட்டிருக்கும் போர்டுகளிலும் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் புதிய பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய பெயரில் சென்னை என்ற பெயரே இடம் பெறாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேலி, கிண்டலுடன் மீம்ஸ்-ஐயும் பதிவு செய்து வருகின்றனர்.
ரயிலில் உள்ள பெயர் பதாகையில் நீண்ட பெயர் இடம்பெற்றிருப்பதால் அது பயணிகள் படிப்பதற்கு சிரமமாக உள்ளது. மேலும் வெளிமாநிலத்தினர் சென்னைக்கு வருவதாக இருந்தால், அவர்களுக்கு இந்த ரயில் சென்னைக்கு தான் செல்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் சென்னை என்ற வார்த்தையே இல்லாமல் உள்ளது.
அதேபோல ரயிலுக்காக காத்திருப்பவர்களும், ரயிலில் பயணித்துக்கொண்டிருப்பவர்களும் இந்த பெயர் மாற்றம் குறித்து அறியாமல் இருந்தால், அவர்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு பதிலாக வேரொரு இடத்திற்கு பயணிப்பதற்காண வாய்ப்புகளும் அதிகம்.
சிலர் சென்னை என்ற ஊர் பெயரை எம்.ஜி.ஆர் என மாற்றிவிட்டார்களா என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு தினசரி லட்சக்கணக்கான மக்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கையில் ஊர் பெயரே இல்லாமல் ஒரு மத்திய ரயில் நிலையத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை என்ற பெயரை சேர்க்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.