சனி, 20 ஏப்ரல், 2019

தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை; மின்னல் தாக்கி பசுங்கன்று உட்பட இருவர் உயிரிழப்பு! April 19, 2019

தமிழகத்தில் ஆங்காங்கே பெய்த மழையின்போது, மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ராஜபாளையத்தில் பெய்த கனமழையால் பாலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், ஆங்காங்கே பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அங்கிருந்த சிறிய பாலத்தில் பள்ளம் ஏற்பட்டது. ஆவாரம்பட்டியில் பெய்த மழையின்போது மின்னல் தாக்கியதில் மண்பாண்டதொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.   
மதுரையில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடந்த நிலையில், செல்லூர், கே.கே.நகர், அண்ணாநகர், கோரிப்பாளையம், சிம்மக்கல், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் கோடையின் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 
மேலூர் பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தெற்குதெரு, நாவினிபட்டி, சூரக்குண்டு, எட்டிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. கோடை மழை அவ்வப்போது பெய்தால் குடிநீர் பிரச்னை தீரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.  
 
திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேந்தமங்கலம், புலிவலம், உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக  பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்தது.  
தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், புதுப்பாளையம், முத்துகாளிப்பட்டி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் வெப்பத்தால் அவதியடைந்து வந்த மக்கள், இந்த கன மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு உள்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் கோடையின் வெப்பம் சற்று தணிந்தது. திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் மின்னல் தாக்கியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மாசானம் என்பவர் உயிரிழந்தார். பசுங்கன்று ஒன்றும் பலியானது.