ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

நதிநீர் இணைப்பு என்பதை நாம் நிச்சயமாக செயல்படுத்த முடியாது" : தேசிய தண்ணீர் குழுமம் April 13, 2019

Image
நதிநீர் இணைப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் பா ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாத்தியமில்லா திட்டங்களை கூறுவதாகவும் தேசிய தண்ணீர் குழுமம் தெரிவித்துள்ளது.
 
தேசிய தண்ணீர் குழுமம் மற்றும் தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்கம் சார்பில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. இதில் தேசிய தண்ணீர் குழுமம் தலைவர் ராஜேந்திர சிங், செயலாளர் சத்யநாராயணா, தமிழ்நாடு ஆறுகள் வள மீட்பு இயக்கம் குருசாமி, தீபா சேஷாத்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது, தேர்தலை சந்தித்து வரும் அதிமுக மற்றும் திமுக இதற்கு முன் ஆட்சியிலிருந்துள்ளனர். ஆனால் நதி நீருக்கான எந்த நல்ல திட்டத்தையும் அவர்கள் கொண்டு வரவில்லை. 
 
இன்று வரையில் நதிநீர் தொடர்புடைய நல்ல திட்டங்கள் கொண்டு வருவதாக கூறி வருகின்றனர். இதை மக்கள் நம்பி விடக்கூடாது என்றனர். நமது நீர் ஆதாரங்களையும் நிலையான நீரோட்டத்தையும் நாம் இழந்து வருகின்றோம். நீர் ஓட்டத்திற்கான செயல்திட்டங்களுக்கு பதிலாக நதிக்கரைகளை அழகு படுத்தும் 
வேலை மட்டுமே தற்போது நடந்து வருகிறது. 
 
இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியிலிருந்து முன்னேற்றம் என்ற பெயரில் நதிநீர் அழிவு திட்டங்கள் தான் கொண்டு வந்துள்ளனர். மேலும் சென்னையை பொருத்தவரை கொசஸ்தலை கூவம் அடையாறு ஆகிய நதிகளை தூர்வாரி பாதுகாத்தால் சென்னைக்கு குடிநீர் பஞ்சமே இருக்காது என்றனர். தொடர்ந்து பேசிய அவர்கள்பா ஜனதா காங்கிரஸ் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறிவரும் நதிநீர் இணைப்பு என்பது இயற்கைக்கு மாறானது. நதிநீர் இணைப்பு என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் நதிநீர் இணைப்பு என்பதை நாம் நிச்சயமாக செயல்படுத்த முடியாது என்றனர்.