மக்களவைத் தேர்தலில் மூன்றாம் கட்டமாக நாளை 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், 3ம் கட்டமாக குஜராத்,கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், அஸ்ஸாம், கோவா, திரிபுரா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுதவிர டாமன் டயூ, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களில் உள்ள 2 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திரிபுரா கிழக்குத் தொகுதியின் தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது.
ராகுல்காந்தி தொகுதி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராகுலுக்காக அவர் சகோதரி பிரியங்கா காந்தி தீவிரமாக வாக்கு சேகரித்தார். 117 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.
source ns7.tv