வியாழன், 18 ஏப்ரல், 2019

பலுசிஸ்தானில் பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; பயணிகள் 14 பேர் பலி! April 18, 2019

credit ns7.tv
Image
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பயணிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு பாலோக் இனத்தை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் தனி நாடு கோரி போராடி வருகின்றன.
இதனிடையே Ormara நகரில் இருந்து கராச்சி நோக்கி மக்ரான் கடற்கரை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை வழிமறித்த தீவிரவாதிகள் பாலோக் இனத்தை சேராதவர்களை கண்டறிந்து அவர்களை மட்டும் பேருந்துகளில் இருந்து இறக்கி அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துயர சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பேருந்தில் கடற்படை வீரர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுடைய அடையாள அட்டையை வைத்தே பாலோக் இனத்தை சேராதவர்களை கண்டறிந்து இந்த தாக்குதல் அரங்கேறியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவருமே பாகிஸ்தானியர்கள்.
இந்த தாக்குதலுக்கு பாலோக் பிரிவினைவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அந்த இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றும் எங்களுடைய இலக்கு கடற்படை வீரர்களும், அலுவலக ஊழியர்கள் மட்டுமே என கூறினார்.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானின் பாதுகாப்புப்படை வீரர்கள் அணியும் சீருடையை அணிந்து வந்துதான் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 
ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாலோக் தீவிரவாத குழுக்கள் தவிர்த்து, ஐ.எஸ் இயக்கத்தினரும் செயல்பாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் இன்ரான் கான், பலுசிஸ்தான் முதல்வர் உட்பட பலரும் கண்டித்துள்ளனர்.